சென்னை, ஜன. 10:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாவட்டத்தில் “உங்க கனவ சொல்லுங்க” திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9–ந் தேதி) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது நினைவிருக்கலாம்.
மேலும் தன்னார்வலர்களிடம் தங்கள் கனவினை தெரிவிப்பவர்களுக்கான தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை துணை முதலமைச்சர் வழங்கினார்.
மா.சுப்பிரமணியன்
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர், த. வேலு, இ.பரந்தாமன், நா.எழிலன், ஆர்.மூர்த்தி, அ.வெற்றிஅழகன், ஜோசப் சாமுவேல், மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மண்டல குழு தலைவர் எஸ்.மதன்மோகன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![]()





