சென்னை, மார்ச் 13–
அமைச்சர் தியாகராஜன் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி– ஆங்கிலம், இரண்டாம் மொழி – பிரெஞ்சு/ ஸ்பானிஷ் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் யாராவது ஏற்பார்களா? என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மும்மொழி கொள்கை அவசியமா?, அவர்கள் அறிவு உள்ளவர்களா? என கேட்டிருக்கிறார். அவரிடம் திருப்பி கேட்கிறேன். ‘உங்கள் மகன் இந்திய குடிமகனா?, அமெரிக்க குடிமகனா?. இந்த 2 கேள்விக்கும் பதில் சொல்லிவிட்டு உங்கள் மகன் எந்த பள்ளியில் படிக்கிறான்?, உங்கள் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில் படிக்கிறான் என்றால், உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம் என்று கூறினார்.
இதனையடுத்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், என் மகன்கள் பள்ளிப் படிப்பை இருமொழிக் கொள்கையிலேயே படித்தனர் என்று கூறினார்.
இதற்கு பதலளித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–
நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி–ஆங்கிலம், இரண்டாம் மொழி– பிரெஞ்சு/ ஸ்பானிஷ் இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?. தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்? இவரது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.