செய்திகள்

உங்கள் ‘இக்கிகய்’–யை கண்டறிந்தால் 100 வயதை கடந்தும் நீங்கள் வாழலாம்!

Makkal Kural Official

‘இக்கிகய்’ (நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய ரகசியம்)


புத்தகம் பேசும் உண்மை!


ஆசிரியர்கள்: ஹெக்டர் கார்சியா,

பிரான்செஸ்க் மிராயியஸ்

தமிழில்: பிஎஸ்வி குமாரசாமி

பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்


‘இக்கிகய்’ என்ற சொல் புதிராக இருக்கிறதா? நமக்கு புழக்கப்படாத, வேற்று மொழிச் சொல், புதிராகத்தானே இருக்கும். ஜப்பானில் மிகவும் புகழ்பெற்றச் சொல் ‘இக்கிகய்’. அதிலும் 100 ஆண்டுகளை கடந்து வாழும் ஜப்பானின் ஓக்கினாவா தீவிலுள்ள ஒகிமி நகரத்தில் அனைவராலும் பயன்படுத்தப்படும் சொல்லாக ‘இக்கிகய்’ இருப்பதில் வியப்பில்லைதானே.

‘இக்கிகய்’ என்றால் என்னவென்றுதானே கேட்கிறீர்கள். “எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமே நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற தாகத்தை உங்களுக்குள் தோற்றுவிக்கும்” என்பது ஜப்பானிய பழமொழி. ஒரு மனிதன் எப்படி சுறுசுறுப்பாக இருக்க முடியும்? சுறுசுறுப்பாக இருப்பதற்கு வாழ்க்கையில் ஒரு நோக்கம் வேண்டுமல்லவா? அதனை கண்டுபிடிப்பதுதான் ‘இக்கிகய்’ என்றும் சொல்லலாம். ஆனால், இதற்கான பொருளை, “எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தரும், மகிழ்ச்சி என்று வேண்டுமானால் கூறலாம்” என்று ‘இக்கிகய்’ புத்தக ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

உங்கள் இக்கிகய் என்ன?

நீங்கள் வாழ்வதற்கான அர்த்தம் என்ன? என்ற தேடலை கண்டறிந்தால் அதுதான் ‘இக்கிகய்’. பிரபல தத்துவவியலாளர் நீயட்சே கூறியுள்ள உலகப் புகழ்பெற்ற முழக்கத்தை இங்கு பொருத்திப்பார்க்கலாம். அதாவது, “தான் வாழ்வதற்கான ஒரு காரணத்தைக் கொண்டுள்ள ஒருவரால், தன் வாழ்வில் தான் எதிர்கொள்ளக்கூடிய அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவற்றைக் கையாள முடியும்” என்கிறார். வாழ்க்கைகான அர்த்ததை நாம் உருவாக்குவதில்லை; வெறுமனே கண்டுபிடிக்கிறோம் என்ற சான் பால் சார்த்தரின் கூற்றும் இங்கே உண்மையாகிறது.

விக்டர் பிராங்கல் என்ற மருத்துவர், ஹிட்லரின் நாஜி வதை முகாமில் அடைக்கப்படுகிறார். அப்போது, புத்தகமாக வெளியிட எண்ணி இருந்த அவருடைய மருத்துவ ஆய்வு குறிப்பை எரித்து விடுகிறார்கள். எனவே, அவர் வதை முகாமில் இருந்த காலம் முழுக்க, அவர் நினைவுகளில் இருந்து, அவர் திரட்டிய மருத்துவ ஆய்வு குறிப்புகளை, கிடைக்கும் தாள்களில் எழுதி வருகிறார். அதனால், வாழ்வதற்கான ஒரு நோக்கம் அவரிடம் எழுந்தது. அதுவே, வதை முகாமில் இருந்து வெளியே வந்து லோகோ சிகிச்சை முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்தது.

வேலை எப்படி இருக்க வேண்டும்

இக்கிகய்–யில் ‘திளைத்திருத்தல்’ என்ற கோட்பாடு நீண்ட ஆயுளுக்கு மிகவும் முக்கியம் என்கிறார்கள். அதாவது எந்த வேலை செய்யும் போது, நேரம் போவதே தெரியாமல் அதில் திளைத்து இருக்கிறோமோ அந்த வேலையை செய்ய வேண்டுமாம். எளிதான வேலை சலிப்பூட்டும் என்பதுடன், மிக அதிக சவாலானது, நமது திறமைக்கு அப்பாற்பட்டது என்பதால் பதற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். ஆனால் சவாலான வேலை, திளைத்திருக்கும் நிலையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

100 வயதை கடந்து வாழும் ஜப்பானியர்களின் இயல்புகளாக, தோழமையை பேணுதல், அளவோடு சாப்பிடுதல், தேவையான ஓய்வு, மிதமான உடற்பயிற்சி, திறந்தவெளியில் அதிக நேரம் இருத்தல், எளிமையான, அதேவேளை ஏராளமான காய், கனி உணவுகள், பசுந்தேயிலை நீர் அருந்துதல் போன்றவை உணவு பழங்கங்காளாக இருப்பதுடன், அவர்களிடம் பொங்கி வரும் மகிழ்ச்சியும் பிறரை சகோதரராய் நேசிக்கும் பண்பு ஆகியவை அவர்களுடைய அடிப்படையான உணர்வாக இருப்பதும் காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்ந்தவர்களின் பட்டறிவு

முதுமை அடையாமல் இளமையுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஜப்பானியர்கள் சுருக்கமாக கூறுவது இதுதான்…ரசித்து ருசித்து குறைவாக சாப்பிடுங்கள், முன் தூங்கி முன் எழுந்து, எழுந்ததும் காலார நடக்கச் செல்லுங்கள். ஒவ்வொரு நாளையும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள், பேரக் குழந்தைகளுடன் ஆடிப்பாடுங்கள். நம்பிக்கையோடு இருப்பதுடன், வாழ்வை பதட்டமின்றி இயல்பாய் வாழுங்கள். விரல்கள் மூளையோடு தொடர்புடையது. எனவே கை விரல்களை எப்போதும் அசைத்துகொண்டு இயக்கத்தில் வைத்திருந்தால் நூறு வயதை எளிதாக வாழலாம் என்கிறார்கள்.

அத்துடன் 100 வயதை கடந்த மூத்த குடிமக்கள் தங்கள் அனுபவமாக கூறும்போது, வாழ்வில் பதட்டமடையாமல் இருங்கள், பதட்டத்தை தவிர்க்க வேண்டுமானால், தெருவில் இறங்கி அனைவரிடமும் ஹாலோ என்று கூறுங்கள். பிறரை பார்த்ததும் புன்னகை புரியுங்கள். எப்பொழுதும் சிரித்துக்கொண்டு இருக்க பழகுங்கள். நீண்ட காலம் வாழ உடற்பயிற்சி, நல்ல உணவு, பிறருடன் நேரம் செலவழித்து, அவசரமற்ற ஒரு வாழ்வை வாழுங்கள். எதையும் மெதுவாக செய்யுங்கள் ஆசுவாசமாக செய்யுங்கள் என்று தங்களுடைய பட்டறிவை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

அதேபோல வாகனங்களைத் தவிர்த்து, நடந்து செல்வதை முன்னிலைப்படுத்துகின்றனர். உடலை இளமையாக வைத்திருக்க வேண்டுமென்றால், நாம் நம் மனத்தை இளைமையாக வைத்திருக்க வேண்டும். எதையாவது படித்துக்கொண்டே கற்றுக்கொண்டே இருங்கள். இதுவும் ‘இக்கிகய்’–இன் முக்கியமான அம்சமாகக் கருதப்படுகிறது. ஒரே இடத்தில் ஆணி அடித்தார்போல் இருக்காமல், ஏதாவது ஒன்றை செய்து, அசைந்து கொண்டே இயங்கிக்கொண்டே இருங்கள் என்று கூறுகிறார்கள். இதனை நாமும் கடைபிடித்தால், 100 வயதை கடந்து வாழலாம். அதற்கு முன்னர் உங்கள் ‘இக்கிகய்’ எனும் வாழ்வின் நோக்கத்தை முதலில் கண்டறிந்து விடுங்கள்.


–மா.இளஞ்செழியன்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *