செய்திகள்

உங்களிடம் டிராக்டர் இருக்கிறது; என்னிடம் சைக்கிள் கூட இல்லை: விவசாயியிடம் சொன்ன மோடி

டெல்லி, டிச. 01–

ரூ.2 கோடியே 50 லட்சம் வைப்பு நிதி உள்ளதாக சொத்து விவரங்களை வெளியிட்ட மோடி, ஜம்மு விவசாயியிடம் காணொலியில் பேசியபோது, உங்களிடம் டிராக்டர் இருக்கிறது, என்னிடம் சைக்கிள் கூட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பொது நிகழ்ச்சிகள், அரசு நிகழ்ச்சிகள் என அனைத்து மேடைகளையும் தேர்தல் பிரசார மேடைகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் கூட, குஜராத்தில் ரூ.5,206 கோடியிலான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், நாடு முழுவதுமுள்ள மக்களுக்கு 4 கோடி வீடுகளை எனது அரசு கட்டிக் கொடுத்ததில், நான் திருப்தி அடைகிறேன். அதேமயம், எனது பெயரில் ஒரு வீடுகூட கிடையாது என்று தேர்தல் பிரசாரம் போல் அரசு நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

சைக்கிள் கூட இல்லை

இந்த நிலையில், காணொலி வழியாக, ஒன்றிய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் மோடி உரையாடிய மோடி, ஜம்மு காஷ்மீரின் ரங்பூர் கிராமத்தின் சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் பேசினார். அப்போது, கிசான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி பல்வீர் கவுர் கூற, “உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள் கூட இல்லை” என்று மோடி கூறினார்.

அண்மையில், பிரதமர் என்ற முறையில் தன்னுடைய சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை மோடி தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், குஜராத்தின் முதலமைச்சராக இருந்ததிலிருந்து தற்போது வரை, எஸ்.பி.ஐ-யின் காந்தி நகர் கிளையில் ஒரே ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே மோடி வைத்திருப்பதாகவும், அதில் இந்த ஆண்டு மார்ச் வரையில் 2.47 கோடி ரூபாய் வைப்பு நிதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, மோடியின் பெயரில் கடனோ, வாகனங்களோ, நில சொத்துகளோ இல்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *