செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று 3 வது கட்டப் பேச்சு: போர் முடிவுக்கு வருமா?

மாஸ்கோ, மார்ச் 7–

எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்ற ரஷ்ய அதிபர் புதின் கூறியிருந்த நிலையில் இன்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தலைநகர் கீவ்வை குறிவைத்துத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய பகுதிகளில் உச்சக்கட்ட தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் பொது மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நேற்று முன்தினம் ரஷ்யா–உக்ரைன் இடையே போர் ஒப்பந்தம் போடப்பட்டது.

3 வது கட்ட பேச்சுவார்த்தை

இந்நிலையில், ஒடேசா நகரைக் கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வருவதாக நேற்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறினார். உக்ரைனின் மத்திய வடக்கு தெற்கு நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தொடர் தாக்குதலால் கடந்த 11 நாட்களில் உக்ரைனிலிருந்து 15 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று ஐநா தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போடும் வரையிலும், எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையிலும் தாக்குதல் தொடரும் என்று புதின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையே இன்று மூன்றாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் உடன்பாடு ஏற்பட்டுப் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.