நாடும் நடப்பும்

உக்ரைன் – ரஷ்யப் போர் எப்படி, எப்போது முடியும்?


ஆர். முத்துக்குமார்


உக்ரைனில் துவங்கிய போர் காட்சிகள் 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த போர் எப்படி? எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது உண்மை. அமைதியை நிலைநாட்ட, ஐநா சபை உள்பட பல்வேறு வல்லுநர்களும் இது பற்றி தீவிரமாக விவாதிக்க தொடங்கி விட்டனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை அறிவிப்பு, ஒரு உலக வரலாற்று நிகழ்வாகும். எழுதப்படாத ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் உள்ளது.

போர்நிறுத்த சாத்தியங்கள்

இந்நிலையில், இந்த போர் எவ்வாறு முடிவடையும் என்பதற்கான சில காட்சிகள் இப்படித்தான் இருக்க முடியும்…

திருத்தப்பட்ட ஐரோப்பிய பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக ரஷ்யா மாறலாம்.

ரஷ்யாவிற்கு எதிரான முன் நிபந்தனையற்ற பொருளாதாரத் தடைகளை மேற்கு நாடுகள் விலகிக் கொண்டால், போர் காட்சிகளை நிறுத்த புடின் உத்தரவிடலாம்.

உக்ரைனில் ரஷ்யாவின் போர் முயற்சிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இழுத்துச் சென்றால், போரினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், கொரோனா தீவிரத்தையும் விட, நிதி நிர்வாகம் மோசமானதாக மாறிவிடும் நிலையில் உக்ரைன் பின்வாங்கலாம்.

உக்ரேன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி உயிருக்கு அஞ்சி தப்பியோடி அமெரிக்காவில் தஞ்சம் பெறலாம்.

ஐரோப்பாவின் தேவை

2023 ஆம் ஆண்டில், உலகளாவிய எண்ணெய் விலை பீப்பாய்க்கு நூறு டாலர்களுக்கும் மேல் போகும் நிலையில், வரும் கடுமையான குளிர்காலத்தை எண்ணி, ஐரோப்பிய யூனியன் (EU) நாடுகள், எரிசக்தி விநியோகங்களை ரஷ்யாவிடம் இருந்து பெற, ஐரோப்பாவின் பொருளாதார முற்றுகைகளை, விலக்கிக் கொள்ள முன் வரலாம்.

ரஷ்ய மத்திய வங்கியின் திறமையான மேலாண்மை சாத்தியமில்லாத சூழ்நிலையில், பணவீக்கம் விஷம் போல் ஏறி, உணவுப்பொருள்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், உக்ரைன் போர் வெற்றியை விட, மக்களின் நலன் முக்கியம் என்ற அக்கறையுடன் இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா நிறுத்தலாம்.

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் ஜெர்மன் சான்சிலர் ஓலாஃப் ஷோல்ஸும், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்திற்கு நடுவராக இருக்க சம்மதித்துள்ள நிலையில் ஏதாவது நல்ல முடிவு வரலாம்.

போரினால் ஏறக்குறைய பத்து மில்லியன் உக்ரேனியர்கள் ஐரோப்பாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இதனால் அங்கு ஏற்படும் பொருளாதார மந்தநிலை, மேலும் அகதிகளை அனுமதிப்பதற்கான பொது எதிர்ப்பை தூண்டுவதை எண்ணி மாற்றம் ஏற்படலாம்.

ரஷ்ய துருப்புக்கள் தங்கள் ராணுவ நடவடிக்கையை முடித்துக்கொண்டு உக்ரைனில் தங்கள் இருப்பைக் குறைக்கத் தொடங்கியவுடன், சில தடைகளை நீக்குதல் போன்ற கோரிக்கைளை முன்வைத்து ஒரு வழியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, இஸ்ரேல் ஆகிய நாடுகள், சீனா, இந்தியா தலைமையில் இருதரப்பு போர் நிறுத்த பேச்சு வார்த்தை நடத்த முன்வந்தால், ரஷ்ய அதிபர் புதின் விரும்பி பங்கேற்று, நல்ல தீர்வு கான தயாராகவே இருப்பார்.

அமெரிக்காவின் தடை

உக்ரைனின் நேட்டோ உறுப்பினர் கனவு இனி சாத்தியமில்லை என்று செலென்ஸ்கி அண்மை காலமாக உணரத்தொடங்கி விட்டாலும், அமெரிக்கா விடுவதாக தெரியவில்லை என்பதும் போர் நிறுத்தத்துக்கு பெரும் தடையாக உள்ளது.

ஐ.நா. (UN) பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் (அதாவது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்) மற்றும் இதர வல்லரசுகளும் உக்ரைனின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வரை, உக்ரேன் அதிபர் மனமாற்றம் செய்ய கொள்ள தயாராக இருக்க மாட்டார்.

மேற்சொன்ன இத்தகைய காரணிகளில் ஏதாவதொன்று நடைமுறைக்கு வரும்போதுதான், உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு வரும் என்று உறுதியாக சொல்லலாம்.


Leave a Reply

Your email address will not be published.