செய்திகள்

உக்ரைன் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்

கீவ், மார்ச் 23–

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் ‘சூப்பர் பவர்’ வெடிகுண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்துகிறது.

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவ நேற்றிரவு அந்நகரின் மீது 2 ‘சூப்பர் பவர்’ (ஹைப்பர்சோனிக் ஏவுகணை) வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது அலை அலையாக பாய்ந்து சென்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

குடியிருப்புக் கட்டிடங்கள் மட்டுமல்லாமல் மழலையர் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் மீது ரஷ்யா தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக நகர் முழுவதும் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. தகவல் தொடர்பு அனைத்தும் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளன. குடிநீர், மின்சார இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன.

கடும் சண்டைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆபத்தை உணராமல் வாகனங்கள் மூலம் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைகளில் கிடக்கும் பிணங்களைத் தாண்டி தப்பித்த வண்ணம் உள்ளனர்.

2 லட்சம் பேர் வெளியேற்றம்

மரியுபோலில் இருந்து இதுவரை 2 லட்சம் பேர் தப்பித்துள்ளனர்.

இதற்கிடையில் உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரெஸ்சுக் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், மரியுபோலில் இருந்து கடைசி நபர் வரை எப்படியாவது மீட்போம். ரஷ்யர்களுக்கு மரியுபோலை நகரைக் கைப்பற்றுவது குறிக்கோள் இல்லை. அந்த நகரையே சாம்பலாக மாற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் இலக்கு என்றர்.

இதற்கிடையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போப் பிரான்சிடம் போரை நிறுத்த உதவுமாறு கோரியுள்ளார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனித உயிர்களின் துயரத்துக்கு முடிவு கட்டுமாறு வேண்டியுள்ளார்.

மேலும், ரஷ்ய அதிபர் புதின் நேரடி பேச்சுக்கு முன்வர வேண்டும். அப்போதுதான் போர் முடிவுக்கு வரும். பேச்சுவார்த்தையின் போது டான்பாஸ், க்ரிமியா என அனைத்து விவகாரம் குறித்தும் பேசலாம் என்று கூறியுள்ளார்.

நாங்கள் சரணடையும் முன் அழிக்கப்படுவோம் என்றே கருதுகிறேன் என்றும் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ரஷ்யாவின் க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “உள்நாட்டுப் பாதுகாப்பு என்பதற்கான கொள்கை குறிப்பு உள்ளது. அந்தப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலே நாங்கள் அணு ஆயுதம் பயன்படுத்துவோம். அது எங்களின் கொள்கையின்படி நடக்கும்” என்றார்.

அவருடைய கருத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரு நாடு பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.