செய்திகள்

உக்ரைன்: தமிழக மாணவர்கள் திரும்பும் வரை டெல்லியில் முகாம்

தமிழக குழுவினருக்கு ஸ்டாலின் உத்தரவு

புதுடெல்லி, மார்ச்.8-

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் திரும்பும் வரை தமிழக குழுவினர் டெல்லியில் முகாமிட்டு கண்காணிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா தலைமையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நேற்று நடைபெற்றது.

இக்குழுவின் உறுப்பினர்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எம்.அப்துல்லா எம்.பி. மற்றும் தமிழ்நாடு இல்லத்தில் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, உள்ளுறை ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி, மேலாண்மை இயக்குனர் ஏ.கே.கமல் கிஷோர், இணை மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ், மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் திருச்சி சிவா எம்.பி. கூறியதாவது:-

உக்ரைனில் இருந்து வருகை தரும் மாணவர்களை உடனுக்குடன் தமிழ்நாட்டிற்கு அனுப்புவதற்கு தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லி வரும் மாணவர்களை தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கி தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து 1,196 மாணவர்கள் இதுவரை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

உக்ரைனில் இருந்து சொந்த செலவில் 255 பேர் ஏற்கனவே வந்தடைந்து உள்ளனர். இதுதவிர தற்போது தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள 136 மாணவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களை சிறப்பு குழுவினர் சந்தித்து அவர்களுக்கு தேவையானதை கேட்டறிந்தனர். தங்களுக்கு தமிழ்நாடு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு திரும்பும் வரை மீட்பு குழுவினர் டெல்லியில் முகாமிட்டு கண்காணிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் தமிழக அரசின் செயல்பாட்டை பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேற்கண்டவாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.