கீவ், நவ.10–
உக்ரைனின் கேர்சான் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார்.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் கீவ் நகர் வரை வெகு வேகமாக முன்னேறிய ரஷ்ய படைகள் பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைன் கொடுத்த பதிலடியால் பின்வாங்கியது.
இதனிடையே, போர் மூலம் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட உக்ரைனின் லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன், ஜபோரிஜியா ஆகிய நகரங்களை தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
இந்நிலையில் நேற்று உக்ரைனின் கேர்சான் பகுதியில் இருந்து ரஷ்யப் படைகளை திரும்புமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கோ உத்தரவிட்டார். இது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டது.
ஆனால், உக்ரைன் தரப்போ இதை தாங்கள் பெரிதாகக் கருதவில்லை என்று கூறியுள்ளது.
இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகர் கூறுகையில், “உக்ரைன் கொடி கேர்சானில் பறக்கும் வரை ரஷ்யா பின்வாங்கியது என்றெல்லாம் மகிழ்ச்சி கொள்ள முடியாது. கேர்சானில் இன்னும் ரஷ்யப் படைகள் இருக்கின்றன. புதிய படைகளை அனுப்ப அந்நாடு திட்டமிட்டுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது” என்றார்.