செய்திகள்

உக்ரைன் கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா

போலீஸ் தலைமை கட்டிடத்தில் ராக்கெட் தாக்குதல்

கிவ், மார்ச் 2–

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை ரஷிய ராணுவம் முழுமையாக கைப்பற்றியது. கார்கிவில் போலீஸ் தலைமையகத்தில் ரஷிய ராணுவம் ராக்கெட் மூலம் பயங்கர தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.

அந்த கட்டிடம் முழுவதும் எரிந்த நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்துள்ளது. கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் ராணுவ நிர்வாகம், மக்களை பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தில் வசிக்கும் 20% ரஷ்யர்

கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும். சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20 சதவீத ரஷிய நாட்டினர் வசித்து வருகின்றனர்.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் ரஷிய வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய தாக்குதலில் இதுவரை 536 பொதுமக்கள் தங்கள் உயிரை இழந்திருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் லிஸ் ட்ராஸ்லர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.