கீவ், மார்ச் 5–
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி போலந்து நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ், மைகோலெவ், செர்னிஹிவ் உள்ளிட்ட நகரங்களில் கிளஸ்டர் வகை குண்டுகளை ஏவி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போரில் ரஷ்யாவின் முக்கிய குறியாக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருதப்படுகிறார். கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற 3 தாக்குதல் முயற்சியில் இருந்து செலன்ஸ்கி உயிர் தப்பியதாவும் கூறப்படுகிறது.
தப்பினாரா இல்லையா?
தலைநகர் கீவ்வில் தனது பாதுகாவலர்களுடன் தங்கி இருந்த அதிபர் செலன்ஸ்கி தற்போது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், அவர் போலந்து நாட்டிற்கு தப்பி ஓடியிருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக, இதேபோல் செய்தி வெளியான பின்னர், கீவ் நகரின் தெருக்களில் நின்றபடி செலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
அதிபர் செலன்ஸ்கியை தொடர்பு கொள்ள முடியவில்லை என உக்ரைன் எம்.பி-க்களும் கூறியுள்ள நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டு தப்பி செல்லவில்லை எனவும் இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தான் இருப்பதாக உக்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.