கீவ், ஆக. 8–
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதித்திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவரை உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ல் போர் மூண்டது. அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் உக்ரைன் இணைய முன்வந்ததையடுத்து ரஷ்யாவால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போரின் தாக்கம் உக்ரைனில் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வியலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே அண்மையில் ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. இந்நிலையில் அதிபர் ஜெலென்ஸ்கியை கொலை செய்யும் ரஷ்யாவின் சதித்திட்டத்திற்கு உதவியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் சுற்றுப்பயணம்
தெற்கு உக்ரைனின் மைகோலய்வ் பிராந்தியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக அதிபர் ஜெலென்ஸ்கி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அந்த பகுதியில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த ரஷ்யா சதித் திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த தகவலை அறிந்த புலனாய்வு படை, உக்ரைன் அதிபருக்கான பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிபர் ஜெலென்ஸ்கியின் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள், மைகோலய்வ் பகுதியில் உள்ள ஆயுதக் கிடங்குகள் உள்ளிட்ட முக்கிய உளவுத் தகவல்களை அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு பெண் சேகரித்து ரஷ்ய ராணுவத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.