செய்திகள்

உக்ரைனுக்கு அமேசான் நிறுவனம் ஆதரவு: டுவிட்டரில் சிஇஓ தகவல்

நியூயார்க், மார்ச் 3–

உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று, அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் ஆண்டி ஜாஸ்ஸி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்படும் ஏற்படாததால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஒருபக்கம் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.

அமேசான் ஆதரவு

உலக நாடுகள் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்பை சேர்ந்த பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதி உதவி வழங்கி ஆதரவு அளித்து வருகிறது.

இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆண்டி ஜஸ்ஸி டுவிட்டரில் கூறி உள்ளதாவது:–

உக்ரைனின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருவது கவலை அளிக்கிறது. உக்ரைன் மக்களுடன் அமேசான் துணை நிற்கிறது, அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்யும் என்று தெரிவித்துள்ள ஜஸ்ஸி, உதவித் தேவைப்படும் உக்ரைன் மக்களுக்கு அமேசான் நிறுவனமும், எங்கள் பணியாளர்களும் இணைந்து, நிதி நன்கொடைகள், மற்றும் தேவையான உதவிகளை என்ஜிஓக்கள் மூலம் வழங்க தயாராக இருக்கிறோம். மேலும் உக்ரைன் அரசுக்கும் அங்குள்ள நிறுவனங்களுக்கும் இணைய பாதுகாப்பு உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக ஆண்டி ஜாஸ்ஸி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.