நியூயார்க், மார்ச் 4–
உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவிகளை திடீர் என நிறுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்– உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டதால், போர் நிறுத்த ஒப்பந்தம் வரை, ராணுவ உதவிகள் வழங்காது என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ரீதியில் முழு ஒத்துழைப்பை வழங்கி வந்தன. மேற்கத்திய நாடுகளின் அதிநவீன போர் தளவாடங்களை பயன்படுத்தி உக்ரைன் ராணுவம் போரிட்டு வருகிறது.
திடீர் நிறுத்தம்
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே அமெரிக்காவின் ஓவல் மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உக்ரைன் ராணுவத்திற்கு வழங்கி வந்த ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக சாதகமான முடிவை எடுக்கும் வரை, உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கப் போவதில்லை என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.