வாஷிங்டன், பிப்.3–
ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைனுக்கு அதிநவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து வருகிறது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா அந்த நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது. ரஷ்யாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை மீட்க உக்ரைன் கடும் போர் புரிந்து வருகிறது.
பல மாதங்கள் ஆன நிலையில், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையே அமெரிக்க அரசு உக்ரைனுக்கு 2.17 பில்லியன் அளவுக்கு ஆயுத உதவி வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்த உதவியின் போது தங்களுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை வழங்க வேண்டும் என உக்ரைன் கோரி இருந்தது.
முதலில் இதனை வழங்க தயக்கம் காட்டிய அமெரிக்கா இப்போது, அதி நவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க முன்வந்துள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி உக்ரைனுக்கு வழங்க உள்ள ஆயுதங்களில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், டாங்கிகள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ளது.