தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு
டெல்லி, மார்ச் 5–
வெளிநாட்டில் மருத்துவக் கல்வி முடித்துவிட்டு கொரோனா, போர் போன்ற எதிர்பாராத சிக்கல்களால் பயிற்சி மருத்துவம் முடிக்காதவர்கள், இந்தியாவிலேயே அதைச் செய்யலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் (NMC), இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
“உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வெளிநாடுகளில் கொரோனா காரணமாக விதிகப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள், அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவிலேயே பயிற்சி
அத்தகைய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மாணவர்கள் ‘எப்எம்ஜிஇ’ (Foreign Medical Graduates Examination) என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். ஆகையால், இத்தகைய கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பக்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.
இந்த நகர்வு உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.