செய்திகள்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களை பதிவு செய்ய இந்திய தூதரகம் திடீர் உத்தரவு

கீவ், மார்ச் 7–-

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று இந்திய தூதரகம் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்துள்ள போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. அந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் சிக்கினர். கடந்த ஜனவரி மாதம் வரையில் அங்கு 20 ஆயிரம் இந்தியர்கள் தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலானவர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள், ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு விட்டனர். தற்போது போர் நடந்து வருகிற சுமி நகரில் 700 இந்தியர்கள் சிக்கியுள்ளனர். கார்கிவ் நகரில் இருந்து கிட்டத்தட்ட அனைவரும் வெளியேறி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது ஹங்கேரியில் உள்ள இந்திய தூதரகம், ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் மாணவர்களை வெளியேற்றுவது கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறுகிறது. மேலும் அனைத்து மாணவர்களையும் அது புடாபெஸ்ட் நகரில் ராகோசியில் அமைந்துள்ள ஹங்கேரி நகர மையத்தை அடையுமாறு கூறியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகம், அங்கு தற்போது உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக தூதரகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நேற்று திடீரென உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி விடுக்கப்பட்ட டுவிட்டர் பதிவில், ‘‘உக்ரைனில் இன்னும் இருக்கும் அனைத்து இந்தியர்களும் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் உள்ள விவரங்களை அவசர அடிப்படையில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று கூறப்பட்டுள்ளது. டுவிட்டரில் கூகுள் படிவமும் இணைக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இன்னும் எத்தனை இந்தியர்கள் உள்ளனர் என்பதைக் கண்டறியும் மத்திய அரசின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவுரை அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.