செய்திகள்

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுடன் ஸ்டாலின் நேரில் உரையாடல்

நெல்லை, மார்ச்.8-

உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் உள்ள மாணவி நிவேதிதா வீட்டில் வைத்து, உக்ரைனில் இருந்து திரும்பிய ஏனைய மாணவிகள் திவ்யபாரதி, ஹரிணி, மாணவன் நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

அப்போது, ஒவ்வொருவரின் பெயர் மற்றும் ஊர் விவரங்களை தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் நடந்த போருக்கு இடையே தமிழக மாணவர்கள் எல்லையை பாதுகாப்பாக கடந்தது குறித்தும், உணவு தேவையை எவ்வாறு சமாளித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அந்த மாணவர்கள், 2 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், உணவு வழங்கப்படும் இடத்தை வாட்ஸ்–அப் மூலம் தெரிந்து சென்றதாகவும் கூறினார்கள். மேலும், எல்லையை கடந்த பிறகு தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடு தாங்கள் நாடு திரும்ப வெகுவாக உதவியது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றியும் தெரிவித்தனர்.

அப்போது மாணவர் நவநீத ஸ்ரீராம், ‘‘எங்களுடன் மும்பை மாணவர்களும் வந்தனர். அவர்கள் தமிழக அரசு தான் மாணவர்களை மீட்பதில் சிறப்பான ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். தமிழக அரசை போல் எந்த மாநில அரசும் மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்யவில்லை’’ என்றார்.

தொடர்ந்து, அந்த மாணவர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தமிழகத்திலேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அது தொடர்பாக, தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருந்த அதிகாரிகளிடமும் அது குறித்த விவரங்களை கேட்டு உடனே தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.