செய்திகள்

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய விதிமுறைகள் இல்லை

புதுடெல்லி, ஆக. 8–

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய விதிமுறைகள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ பேசுகையில்,

உக்ரைனில் போர் காரணமாக, மருத்துவக் கல்வியை தொடர முடியாமல், தாயகம் திரும்பிய மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி தேசிய மருத்துவ ஆணையத்தின் முன் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் டெல்லி வந்து போராட்டம் நடத்தினார்களா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?

உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் சேர்க்கைக்காக எம்.பி.க்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டதா? அப்படியெனில், அதன் விவரங்கள் மற்றும் அதற்கு என்ன பதில் தரப்பட்டது? போர் காரணமாக உக்ரைனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்களுக்கு பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் மறுசேர்க்கை வழங்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள் என்ன? ” என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.

இதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்து பேசுகையில், “உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019-ன் படி, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் எதுவும் இல்லை. வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை இடமாற்றம் செய்ய இந்திய மருத்துவ ஆணையத்தால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.