செய்திகள்

‘‘உக்ரைனிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு உத்தரவு

தலைநகர் கீவ்வைச் சுற்றி வளைத்து 40 மைல் தூரத்துக்கு வரிசையாக நிற்கும் ரஷ்ய படைகள்

‘கிடைக்கும் ரெயில்களில் ஏறுங்கள்; வேறு வழியில் வெளியேறுங்கள்’ என்று தூதரகம் அறிவுறுத்தல்

கீவ், மார்.1–

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 6–-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. குண்டுகளைப் பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷிய ராணுவப் படைகள் தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என கீவ்-வில் உள்ள இந்திய தூததரகம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் கிடைக்கக்கூடிய ரெயில்கள் அல்லது வேறு வழிகள் மூலமாக உடனடியாக வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கீவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது. இதனால் கார்கீவ் நிலைமை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. இதனிடையே கார்கீவ் நகரில் ஏறக்குறைய 2500 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இது மத்திய அரசின் கவலையை அதிகப்படுத்தியுள்ளது.

பின்வாங்க தயாராய்

இல்லாத ரஷ்யா

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

தொடர்ந்து உக்ரைனின் ராணுவ தளங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது ரஷியா தாக்குதலை தொடுத்து வருகிறது. ரஷிய ராணுவ படைகளின் அணிவகுப்புகளை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்த நிலையில், கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கியுள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

சாலைகளில் படைகள்

ஆக்கிரமிப்பு

ஆன்டனோவ் விமான நிலையத்திற்கு அருகே சாலை முழுவதும் படைகள் ஆக்கிரமித்து காணப்படுகின்றன. இந்த படைகள் பயணம் செய்து வரும் இவான்கீவ் நகருக்கு வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் அமைந்த சாலைகள் அருகே பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் காட்சிகளும் புகைப்படங்களில் காணப்படுகின்றன.

இதுதவிர்த்து, உக்ரைன் எல்லையையொட்டி 20 மைல்கள் வடக்கே, தெற்கு பெலாரஸ் பகுதியில் கூடுதல் தரை படைகளும், தரைகளை தாக்கி அழிக்கும் ஹெலிகாப்டர் படை பிரிவுகளும் குவிக்கப்பட்டு உள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

உக்ரைன் வீரர்கள்

70 பேர் பலி

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. இதில், தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் நகருக்கு இடையே ஆக்டைர்கா என்ற பகுதியில் உக்ரைனின் ராணுவ தளம் ஒன்று அமைந்துள்ளது. இதனை இலக்காக கொண்டு நடந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 70 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன்-ரஷிய போருக்கு மத்தியில் 5 லட்சக்கும் மேற்பட்ட மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளனர் என ஐநா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.

இடம் பெயர்ந்த

1 லட்சத்து 60 ஆயிரம் பேர்

உக்ரைனில் ரஷிய தாக்குதலுக்குப் பிறகு 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர் போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில் 2,81,000,பேர் குவிந்துள்ளனர்.

அந்த பகுதியில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன. பலர் நடந்தே எல்லைகளை கடந்து வருகின்றனர்.

போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.

3 மணி நேரப் பேச்சு:

முன்னேற்றம் இல்லை

போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.