செய்திகள்

ஈஷா மையத்தில் இன்று 2வது நாளாக விசாரணை

Makkal Kural Official

கோவை, அக். 2–

கோவை ஈஷா மையத்தில் இன்றும் 2வது நாளாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள தனது இரு மகள்களை மீட்டுத் தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில், ஈஷா மீதான வழக்குகள், வழக்குகளின் விவரம், மகள்கள் கட்டாயத்தின் பேரில் யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என காமராஜ் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஈஷா யோகா மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல குழுவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

இது தவிர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., பேரூர் டி.எஸ்.பி., ஆலந்துறை, பேரூர், தொண்டாமுத்தூர், காருண்யா நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள், காவல் துறையினர் என 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்றது. ஒவ்வொருவரிடமும் சுய விவரங்கள், சுய விருப்பத்தின் பேரில் தங்கி உள்ளனரா? அவரவர் அடையாள அட்டைகளின் உண்மை தன்மை என தனித் தனியாக விசாரணையானது எழுத்து பூர்வமாக மட்டுமின்றி காணொளி மூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து 70க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த விசாரணைக்கு காரணமான வழக்கு தாக்கல் செய்த காமராஜின் இரு மகள்களான லதா, கீதா மட்டுமின்றி பெண் துறவிகள் , பெண் தன்னார்வலர்களிடம் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங், ஈஷா யோகா மையத்தில் உள்ள பெண் துறைவிகளிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

இதைத் தொடர்ந்து இன்றும் 2வது நாளாக விசாரணை குழுவினர் ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள துறவிகள், தன்னார்வலர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், பள்ளியில் என அனைத்து வகைகளிலும் பல்வேறு கோணங்களில் குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *