ஈரோடு, ஏப். 29–
ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 1,688 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. கடந்த 19-ம் தேதி ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 10 லட்சத்து 86 ஆயிரத்து 287 பேர் வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துவரப்பட்டு சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வைக்கப்பட்டன.
இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஈரோட்டில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 11.30 மணிக்கு சிசிடிவி கேமரா திடீர் பழுதானது. காலை 3.30க்கு வேறு சிசிடிவி பொருத்தப்பட்டது. சிசிடிவி கேமரா பழுதான நிலையில் அதிகாலையில் வேறு கேமரா பொருத்தி கண்காணித்து வருகின்றனர். 220க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் 1 கேமரா மட்டும் பழுதானது.
சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். IP முகவரியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தகவல் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பழுதடைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே நீலகிரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கேமரா பழுதானத நிலையில் தற்போது ஈரோட்டில் கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.