போஸ்டர் செய்தி

ஈரோட்டில் தீபாவளி பட்டாசுகள் வெடித்து, 3 பேர் உடல் சிதறி பலி

ஈரோடு, செப்.12–

தீபாவளி பட்டாசுகள் வெடித்து இன்று காலை 3 பேர் உடல் சிதறி பலியாகினர். அருகில் உள்ள 5 வீடுகள் இடிந்து விழுந்தது.

ஈரோடு, சாஸ்திரி நகர், வலையகார வீதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கார்த்திக் (வயது 30). கல்லூரி மாணவர். இவர்களுக்கு சொந்தமான மளிகை கடை வலையகார வீதியில் உள்ளது.

இந்த கடையை ஜாஸ்மின் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். கடையின் உரிமையாளர் சுகுமாரரும், அவரது மகன் கார்த்திக்கும், தீபாவளி பண்டிகையினையொட்டி ஆண்டுதோறும் மளிகை கடையின் முன்பு கடை போட்டு பட்டாசு விற்பனை செய்து வருவார்கள்.

அதேபோல் இந்தாண்டும் பட்டாசு வியாபாரம் செய்ய பட்டாசுகளை கொள்முதல் செய்தனர். இன்று காலை 6 மணியளவில் மினி ஆட்டோவில் 15 மூட்டைகள் பட்டாசுகள் வந்து இறங்கின. ஆட்டோவில் வந்தவரும், கார்த்திக்கும் பட்டாசுகளை கடையின் முன் இறங்கி கொண்டு இருந்தனர். அப்போது 13 மூட்டைகளை கீழே இறக்கி வைத்துவிட்டனர். மீதமுள்ள 2 மூட்டைகளை அவர்கள் இறக்கியபோது, திடீரென்று மூட்டைக்குள் இருந்த கல்வெடி பட்டாசுகள் வெடித்தது. இந்த வெடி சத்தம் சுற்றியுள்ள 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயங்கரமாக கேட்டது. இதனால் அப்பகுதியில் வீட்டில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு, வெளியே ஓடி வந்து பார்த்தனர்.

உடல் சிதறி பலி

இந்த வெடி விபத்தில் கடையின் உரிமையாளர் கார்த்திக் மற்றும் பட்டாசு இறக்கி வைத்த ஊழியர், ஆட்டோ ஓட்டுநர் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். விபத்தில் உடல்கள் 100 அடி தொலைவில் போய் விழுந்து இருந்தது. உடல் சிதறியதால், கார்த்திக் தவிர 2 பேரின் விபரங்கள் தெரிய காலதாமதம் ஆகியது. பின்னர் ஆட்டோ டிரைவர் செந்தூர்பாண்டியன் (வயது 43) என்றும், ஊழியர் முருகன் (வயது 45) என்றும் தெரிய வந்தது.

மேலும் இந்த வெடி விபத்தில் அருகில் இருந்த 5 வீடுகள் இடிந்து விழுந்தது. வெடி விபத்து அதிர்வால் 10 வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பட்டாசு ஏற்றி வந்த வாகனம் முழுவதும் சேதமானது.

இது பற்றி தகவல் அறிந்தவுடன் ஈரோடு சூரம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேஷ், துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து விபத்து பகுதியினை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் மாவட்ட வெடிகுண்டு நிபுணர்கள் வந்து, வெடி விபத்து நடந்த இடத்தில், பட்டாசு மற்றும் வெடி பொருட்களை பரிசோதனை செய்தனர். இதில் விபத்து ஏற்பட கல்வெடி காரணமாக இருக்கலாம் என்று கூறினர்.

வெடி விபத்து நடந்த சமயம் நிலஅதிர்வு போல் இருந்தது. சம்பவம் நடத்த இடத்தில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இச்சம்பத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *