செய்திகள்

ஈரோடு நாகமலை குன்று உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, அக்.9-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றினை உயிரியல் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு, உயிரியல் பன்மை சட்டம் 2002 பிரிவு 37 (1)-ன் கீழ் அரிட்டாபட்டியை 2022-ம் ஆண்டு நவம்பர் மாதமும், கடந்த மார்ச் மாதம் காசம்பட்டியையும், கடந்த மாதம் எலத்தூர் ஏரியையும் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து 32.22 ஹெக்டேர் பரப்பளவை கொண்ட ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமலை குன்றினை மாநிலத்தின் 4-வது உயிரியல் பாரம்பரியத் தளமாக அறிவித்துள்ளது. நாகமலை குன்று ஒரு சூழலியல் வளமிக்க இடமாகவும் மற்றும் இடம்பெயர்ந்து வரும் மற்றும் உள்ளூர் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பல்வேறு ஈரநில சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு முக்கிய வாழ்விடமாகவும் உள்ளது.

பல்லுயிர் பாரம்பரிய தளம் அந்தஸ்து, உள்ளூர் சமூகங்களின் பாரம்பரிய நடைமுறைகளையோ அல்லது வழக்கமான பயன்பாட்டையோ கட்டுப்படுத்தாது. மாறாக, சூழலியல் சமநிலையை மேம்படுத்துகிறது; மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது.

அதன் நிலப்பரப்பில் உள்ள ஆழமான நீர்நிலைகள், ஆழமற்ற ஓரங்கள், சேற்று நிலங்கள் மற்றும் பாறை பகுதிகள் ஆகியவை வளமான பல்லுயிர்களை ஆதரிக்கின்றன. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஆய்வுகளின்படி, இங்கே 138 தாவர இனங்கள், 118 பறவை இனங்கள் (30 இடம்பெயரும் மற்றும் 88 உள்ளூர்), 7 பாலூட்டிகள், 11 ஊர்வனங்கள், 5 சிலந்திகள் மற்றும் 71 பூச்சியினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதை காட்டுகின்றன. இங்குள்ள முக்கிய உயிரினங்களில் பெரிய புள்ளிகள் கொண்ட கழுகு, வெளிறிய பூனை பருந்து மற்றும் பென்னெல்லிஸ் கழுகு ஆகியவை அடங்கும்.

தாவரங்களை பொறுத்தவரை 48 இனங்கள் மற்றும் 114 பேரினங்களின் கீழ் வரும் 138 தாவர இனங்கள் உள்ளன.

இதில் 125 இருவித்திலைத் தாவரங்கள் மற்றும் 13 ஒருவித்திலைத் தாவரங்கள் அடங்கும். நாகமலை குன்று அதன் சூழலியல் மதிப்புடன் மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க தொல்லியல் மற்றும் கலாசார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் சுவாமி கல்வெட்டு ஒன்று அதன் கலாசாரப் பாரம்பரியத்தை வலியுறுத்துகிறது.

நாகமலை குன்றை உயிரியல் பாரம்பரிய தளமாக அறிவிக்க வேண்டும் என, எலத்துார் பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு ஈரோடு கலெக்டரும் ஒப்புதல் அளித்துள்ளார். நாகமலை குன்றை, வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்க இந்த அறிவிப்பு உதவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *