செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் 50 ஆயிரம் பேர் இல்லை: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. புகார்

புதுடெல்லி, பிப்.4-

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பட்டியலில் 50 ஆயிரம் பேர் இல்லை என்றும் கூறி தேர்தல் கமிஷனில் அண்ணா தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வருகிற 27ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் தற்போது நடந்து வருகிறது. தேர்தல் பிரசாரமும் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்து உள்ளது. இந்த புகாரை சொல்லி அதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகம் எம்.பி. நேற்று டெல்லியில் தேர்தல் கமிஷனில் மனு அளித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

1.1.2023 அன்றைய தேதியை கணக்கில் வைத்து புதிதாக வெளியிடப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் கமிஷன் முறையாக பார்த்ததா? என்றால் இல்லை. அங்கு தேர்தல் நடத்தலாம், எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்ல வேண்டிய கடமை மாநில தேர்தல் கமிஷனுக்கு இருக்கிறது.

வாக்காளர் பட்டியல் எங்களுக்கு தந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு இருக்கிற 238 பூத்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக மொத்தம் உள்ள வாக்காளர் பட்டியலில் நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் வசிக்கவே இல்லை. 45 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்காளர்கள் அந்த தொகுதியில் தற்போது இல்லை.

இது தெரியாமல் செய்த தவறு இல்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் தெரிந்தே செய்து இருக்கிறார். உதாரணத்துக்கு 518 வாக்குகள் உள்ள ஒரு குடியிருப்பு அகற்றப்பட்டு அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்ட நிலையில் மீண்டும் அவர்கள் அதே பகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளனர். இது தேர்தல் அதிகாரிக்கு தெரியும். தெரிந்தே இந்த தவறை செய்து இருக்கிறார். இதுபோல சுமார் 5 ஆயிரம் இறந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்படவில்லை. மேலும் சிலருக்கு 2 இடங்களில் வாக்கு இருக்கிறது. இப்படி முறைகேடாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

திட்டமிட்டு, எதிர்கால தேர்தலை முன்னிட்டு இந்த முறைகேடு நடத்தப்பட்டு உள்ளது. தி.மு.க.வின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த தேர்தல் நேர்மையாக நடைபெறாது. இந்த பட்டியலை வைத்து தேர்தலை நடத்தினால் தி.மு.க.வினர் இல்லாத ஆட்களை வைத்து வாக்குப்பதிவு செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எனவே இதுகுறித்து தேர்தல் கமிஷனில் புகார் அளித்தோம். தவறு செய்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து, நேர்மையான ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும். நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் வாக்காளர் பட்டியலை முறையாக சரிபார்க்க வேண்டும். முறைகேடாக பெயர் உள்ளவர்களுக்கு பூத் சிலிப் வழங்கக்கூடாது. பூத் சிலிப் வழங்கும் அலுவலர்கள் வாக்காளர் அடையாள அட்டையை வாங்கி சரிபார்த்துத்தான் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையை நம்பி தேர்தலை நடத்த முடியாது.

எனவே மத்திய காவல் அதிகாரத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். இந்த கோரிக்கைகளை எல்லாம் வலியுறுத்தி உள்ளோம்.

மேலும் தேர்தலுக்கு பணத்தை இறக்கி விட்டதாக அமைச்சர் நேரு சொல்லும் தகவல்கள் வந்துள்ளன. அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையும் தேர்தல் கமிஷன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *