செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ், அண்ணா தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டி

ஈரோடு, பிப்.11-–

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சின்னங்களும் ஒதுக்கப்பட்டன. அதன்படி காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா திடீரென மரணம் அடைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகிற 27-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 7-ந் தேதி வரை 96 பேர் 121 மனுக்கள் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் கடந்த 8-ந் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. அதில் 83 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மாற்று வேட்பாளர்கள் உள்பட 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நேற்று வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். பிற்பகல் 3 மணி வரை 6 பேர் மட்டுமே தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றனர். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அண்ணா தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகிறார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார் அதற்கான பட்டியலை வெளியிட்டார்.

இடைத்தேர்தலில் இத்தனை பேர் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் அதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.

இந்த தேர்தலுக்காக ஏற்கனவே 286 கட்டுப்பாட்டு கருவிகள், 286 வாக்குப்பதிவு எந்திரங்கள், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர்கள் சரிபார்க்கும் வி.வி.பேட் கருவிகள் 310 என மொத்தம் 882 கருவிகள் தயார் நிலையில் இருந்தன.

ஏற்கனவே இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் இருந்த பழைய பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு புதிதாக வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டன. ஆனால் எதிர்பாராத வகையில் தற்போது 77 பேர் போட்டியில் உள்ளனர். எனவே கூடுதலாக வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.

கூடுதலாக 1000

வாக்குப்பதிவு எந்திரங்கள்

ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான எச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நேற்று கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரெயில்வே காலனி மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் இருந்து, ஈரோடு ஆர்.டிஓ. அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பறைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலுக்கு ஏற்ப மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 1000 என்ற எண்ணிக்கையில் கொண்டுவரப்பட்டன.

கட்டுப்பாட்டு கருவிகள் 21-ம், வி.வி.பேட் கருவிகள் 8-ம் கூடுதலாக கொண்டு வரப்பட்டன.

ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்பிரமணியம், தேர்தல் பிரிவு தாசில்தார் சிவகாமி ஆகியோர் மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வைப்பறைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகளில் உள்ள பழைய பதிவுகள் அழிக்கும் பணி உடனடியாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு முன்பு வேட்பாளர்கள் சீட்டு பொருத்தும் பணி தொடங்கும். அப்போது வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் (பேலட் அலகு) பொருத்தப்படும்.

5 மின்னணு

வாக்குப்பதிவு எந்திரங்கள்

ஒரு வாக்குப்பதிவு கருவியில் 16 வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே வைக்கப்படும். தற்போது 77 வேட்பாளர்கள் இருப்பதால் நோட்டா-உடன் (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) சேர்த்து 78 வேட்பாளர்கள் பெயர்கள் வைக்க 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும்.

ஒரு கட்டுப்பாட்டு கருவியில் 5 வாக்குப்பதிவு எந்திரங்கள் பொருத்தி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கூடுதலாக 1000 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் செய்யப்படுகிறது.

இதற்கிடையே பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு நேற்று மாலை நடந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் சின்னங்கள் ஒதுக்கும் பணியில் ஈடுபட்டனர். வேட்பாளர்கள், முகவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *