ஈரோடு, பிப். 28–
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப்ரவரி 3–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27–ந்தேதி நடைபெற உள்ளது. இங்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். அவரும் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இவரிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுத்தாக்கல் வருகிற 31ந் தேதி தொடங்கி 7ந் தேதி வரை நடக்கிறது. 8ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 10ந் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3–ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேமுதிக சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத் போட்டியிடுகிறார்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக களமிறங்குகிறார்கள. பா.ம.க., சமத்துவ மக்கள் கட்சிகள் தேர்தலில் நிற்கவில்லை.
நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பாரதீய ஜனதா கட்சி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.