ஈரோடு, ஜன. 28–
ஈரோடு கிழக்கு தொகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 246 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவு என்கிற இலக்குடன் தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளது.
அதன்படி தேர்தலில் வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாத 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் முன்கூட்டியே தபால் வாக்குகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது .அதன்படி ’12 டி’ படிவத்துடன் முன்கூட்டியே தபால் வாக்குகள் அளிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 ஆயிரத்து 529 பேரில் 209 பேரும், மாற்றுத்திறனாளிகள் 1,570 பேரில் 47 பேரும் என 256 பேர் தபால் வாக்களிக்க ஒப்புதல் அளித்திருந்தனர்.
அதன்படி அவர்களிடம் வீடு வீடாக சென்று தபால் வாக்கு பதிவு செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. கடந்த 23-ந் தேதி தொடங்கிய இந்த வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது.
இதில், வீட்டில் இருந்தவாறே தபால் வாக்கு செலுத்த ஒப்புதல் அளித்து இருந்த 256 பேரில், 85 வயதுக்கு மேற்பட்ட 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், ஒரு வாக்காளர் இடமாறுதல் ஆனதாலும், 3 வாக்காளர்கள் மரணமடைந்ததாலும், மொத்தம் 10 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தபால் வாக்குப்பதிவு முடிவில் 85 வயதிற்கு மேற்பட்ட 199 பேர், 47 மாற்றுத்திறனாளிகள் என 246 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பெட்டிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அன்று தபால் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வாக்குச்சாவடிக்குச் சென்று தங்களது வாக்கினை செலுத்த தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்யப்பட உள்ளது. வாகன வசதி வேண்டுவோர், 0424-1950மற்றும் 0424 – 2267674, 2267675,2267679, 96004 79643 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.