மதுரை, ஜன. 24–
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய பார்வட் பிளாக் முழு ஆதரவை அளிப்பதோடு தேர்தல் பணிகளையும் மேற்கொள்ளும் என அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் அகில இந்திய பார்வட் பிளாக் கட்சியின் 19ஆவது மாவட்ட மாநாடு அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் பி.வி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த பி.வி.கதிரவன், “நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த நாளை தேச பக்தி தினமாக அறிவிக்க வேண்டும். மகாத்மா காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று, சுதந்திரத்திற்காக காந்தியை விட அதிகப்படியாக ஆங்கிலேயர்களை பயமுறுத்தி விடுதலையை பெற்றுத் தந்த நேதாஜியின் பிறந்தநாளை தேச பக்தி தினமாக அறிவித்து இந்திய அரசும், மாநில அரசும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.
காங்கிரசுக்கு ஆதரவு
இன்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக வாழும் நேதாஜியின் பிறந்த நாளை தேச பக்தி நாளாக அறிவிக்கும் பட்சத்தில் இளைஞர்களிடம் தேச பக்தியை வளர்க்கும் வண்ணமாக இருக்கும் எனவும் பி.வி.கதிரவன் கேட்டுக் கொண்டார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு, அகில இந்திய பார்வட் பிளாக் முழு ஆதரவை அளிப்பதோடு தேர்தல் பணிகளையும் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.