செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல்: இன்று மாதிரி வாக்குப்பதிவு நடந்தது

ஈரோடு, பிப்.20–

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27–ந்தேதி நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு இன்று நடந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27–ந்தேதி நடைபெறவுள்ளது.

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அண்ணா தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். தற்போது தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் களை கட்டி உள்ளது. கிழக்கு தொகுதியில் எந்த வீதிகளில் சென்றாலும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.

வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இத்தொகுதியில் 77 பேர் போட்டியிடுவதால் ஒரு வாக்குச்சாவடி மையத்தில் 5 மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு யந்திரமும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்கும் வசதி உள்ள வி.வி. பேட் யந்திரமும் வைக்கப்பட உள்ளது.

வாக்குசாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள 1,386 வாக்குப்பதிவு யந்திரங்களில் புகைப்படத்துடன் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இந்த பணியினை ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்றும் இந்த பணி நடைபெற்றது.

இதற்கிடையே வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதற்காக 238 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்த்து பூத் சிலிப் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள யந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் யந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி இன்று காலை தொடங்கியுள்ளது.

இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வரும் மாதிரி வாக்குப்பதிவில், ஒவ்வொரு யந்திரத்திலும் 1,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *