ஈரோடு, ஜன. 23–
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி நேரடி மோதலில் உள்ளன. அண்ணா தி.மு.க., தே.மு.தி.க, பா.ஜ.க., மற்றும் த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். தற்போது பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.
தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சித்தோடு ஐஆர்டிடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கம்பி, தகரங்களால் ஆன தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. வாக்கு பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்குகளை தபாலில் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொகுதியில் 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்களிக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ’12–டி’ படிவம் வழங்கப்பட்டு வாக்குசாவடி நிலை அலுவலர்கள் ஒப்புதல் பெற்றனர்.
இந்த நிலையில் தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாக்கு சாவடி அலுவலர்கள் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தபால் வாக்குகளை பதிவு செய்து வந்தனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி தபால் வாக்கு பெறப்படுகிறது. தபால் வாக்குகளை பெற 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குகளை பெறும் பணி நடைபெற்று வருகிறது. வருகிற 27-ந் தேதி வரை தபால் வாக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.