ஈரோடு, செப். 13–
ஈரோடு அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
ஈரோடு, சித்தோடு, கவுந்தப்படி, கோபிசெட்டி பாளையம் சத்தியமங்கலம், பண்ணாரி, திம்பம், சாம்ராஜ் நகர் வழியாக மைசூர் சாலை அமைந்து உள்ளது. இந்த வழியாக மைசூருக்கு தினமும் கார், வேன், சரக்கு வாகனங்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு முதல் பண்ணாரி வரை கவுந்தப்பாடி வழியாக 4 வழி சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதையடுத்து கவுந்தபாடி அருகே உள்ள ஓடத்துறை அடுத்த பால பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என தகவல் பரவியது. இதையடுத்து பால பாளையம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைப்பதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து அதற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கியது.
இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க அந்த பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பாலப்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கவுந்தப்பாடி- கோபிசெட்டிபாளையம் ரோடு பாலப்பாளையம் பகுதியில் கவுந்தப்பாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் ஒன்று திரண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்கள், 200 பெண்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டுனர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவசாயிகள் பலர் டிராக்டர்களுடன் வந்திருந்தனர். அந்த டிராக்டர்களை ரோட்டோரம் நிறுத்தி சுங்கச்சாவடி அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இது பற்றி தகவல் கிடைத்ததும் கோபிசெட்டிபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கவுந்தப்பாடி இன்ஸ்பெக்டர் சுபாஷ் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.