தெக்ரான், ஜூலை 13–
டிரம்பை கொல்ல நாங்கள் டிரோன் தயாராக வைத்துள்ளோம் என்று ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்கின. இதில், அணு சக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் கூறிவருகிறார்.
இதனை தொடர்ந்து இஸ்ரேல்- ஈரான் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இருந்தாலும் ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்த சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் முகமது-ஜாவத் லாரிஜானி, நாங்கள் நினைத்தால் ஒரு ட்ரோனை அனுப்பி அமெரிக்காவிலேயே டிரம்பை கொலை செய்து விடுவோம் என கூறியிருக்கிறார்.
ஈரான் எச்சரிக்கை
அதிபர் டிரம்ப் அவரது புளோரிடா இல்லமான மார்-எ-லாகோவிற்கு அடிக்கடி செல்வது எங்களுக்கு தெரியும் என்றும், அங்கு அவர் சூரிய குளியலில் ஈடுபடும் போது, ஒரு சிறிய ட்ரோனை வைத்து எங்களால் அவரை கொல்ல முடியும்” என லாரிஜானி கூறியிருக்கிறார். இதனை அவர் சிரித்துக் கொண்டே கூறி உள்ளார்.
மேலும் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், இறையாண்மைக்கு எதிரானது என அந்நாடு கூறுகிறது. ஈரானை தாக்கியதற்கு அமெரிக்கா சரி செய்யவே முடியாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஏற்கெனவே, ஈரான் உச்சபட்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையே, உச்சபட்ச தலைவர் அலி காமெனிக்கு எதிராக டிரம்ப் விடுத்த மிரட்டல்களும் மற்றொரு காரணம். காமெனியை அச்சுறுத்துபவர்கள் “கடவுளின் எதிரிகள்” என்று மதகுருமார்கள் மத ஆணைகள் பிறப்பித்துள்ளனர். குறிப்பாக டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என அறிவித்தனர்.
ஈரானின் கொலை மிரட்டல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் இதனை கொலை மிரட்டலாக கருதுகிறீர்களா? ஈரான் விடுத்திருப்பது ஒரு அச்சுறுத்தல் என நினைக்கிறேன் என்றும் டிரம்ப் மிக சாதரணமாக எதிர்வினையாற்றியுள்ளார்.
தற்போது தான் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டிரம்பை கொலை செய்வோம் என ஈரான் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
![]()





