டெல்அவிவ், ஏப். 11–
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, எங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாட்டின் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் அடாவடியாக எச்சரித்துள்ளது.
சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் ந்தேதி தாக்கப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் தூதரகத்தில் இருந்த ஈரான் இராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் எச்சரிக்கை
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது. ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு காரணமான இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் சூளுரைத்தார்.
இந்த பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் தடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை, என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது பகுதியில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுப்பதுடன் ஈரான் மீது நாங்கள் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.