வாஷிங்டன், ஜூன் 15–
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்- – ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தெஹ்ரானில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ”இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. அமெரிக்காவை ஈரான் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்” என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஈரானால் நாம் எந்த வகையிலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும்.
இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.