தெஹ்ரான், ஆக.1–
ஈரானில் வைத்து அதிபர் பதவியேற்ப விழாவுக்கு வந்திருந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் நாட்டின் தலைவர் அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.
2017 முதல் ஹமாஸின் தலைவராகவும், ஹமாஸின் அரசியல் பணியகத் தலைவராகவும் பணியாற்றி வந்தவர் இஸ்மாயில் ஹனியே. அண்மையில் நடைபெற்ற ஈரானின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக தெஹ்ரான் வந்திருந்தார் இஸ்மாயில். இவர் தங்கியிருந்த வீட்டை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹனியே பரிதாபமாக கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஹமாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “நமது தலைவர் முஜாஹித் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்காக பாலஸ்தீனிய மக்களுக்கும், அரபு மற்றும் இஸ்லாமிய தேசத்திற்கும், உலகின் அனைத்து சுதந்திர மக்களுக்கும் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய ஈரானிய அதிபரின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பின்னர், தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேலின் துரோகிகளால் நமது தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார்” என தெரிவித்திருக்கிறது.
ஹமாஸ் எச்சரிக்கை
அதேநேரம் இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஹமாஸ் எச்சரித்திருந்தது. இந்த தாக்குதல் பாலஸ்தீன மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி பங்கேற்றிருந்தார். இந்த கூட்டத்தில் இஸ்ரேல் மீது உடனடியாக நேரடி தாக்குதல் நடத்த வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இதனை நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், “ஈரானிய இராணுவத் தளபதிகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபாவிற்கு அருகிலுள்ள இராணுவ இலக்குகள் மீது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் கூட்டுத் தாக்குதலைப் பரிசீலித்து வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைத் தவிர்ப்பதில் உறுதியாக இருக்கின்றனர்” என்று கூறியுள்ளனர்.