டெஹ்ரான், ஜூன் 15–
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுத்துள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் போர்ப்பதட்டம் நிலவுகிறது.
முன்னதாக ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு இஸ்ரேலை ஈரான் தாக்கியது. மேலும் இஸ்ரேலுக்கு எதிராக அணு குண்டுகளை ஈரான் தயாரித்து வருவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
அப்படி அணு ஆயுத பலம் பொருந்திய ஈரான், தங்களுக்கு எப்போதும் அச்சுறுத்தல் என கருதும் இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து ஈரான் மீது அதிரடி தாக்குதலை தொடங்கியது. தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் இது என அறிவித்த இஸ்ரேல், இந்த ராணுவ நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிட்டு இருந்தது.
ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் வைக்கப்பட்டிருக்கும் ராணுவ தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேலின் போர் விமானங்கள் துல்லியமாக தாக்கின.
குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், மேலும் முக்கிய அணுசக்தி மையமான நட்டன்ஸ், இஸ்பகான் உள்பட பல அணுசக்தி மையங்கள் தகர்க்கப்பட்டன. 200-க்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்திய இந்த தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் இஸ்ரேலின் முக்கிய ராணுவ தளபதிகள் பலரும் அடங்குவர். குறிப்பாக ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி உள்பட பல தளபதிகளும் கொல்லப்பட்டனர்.
அணு விஞ்ஞானிகள் கொலை
மேலும் ஏராளமான அணு விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்தது. ‘அவர்கள் செய்த இந்தப் பெரிய குற்றத்தில் இருந்து அவர்கள் தப்பிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்று ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்துள்ளார்.
அவர் அறிவித்த சில மணி நேரத்திலேயே ஈரானும் பதிலடி கொடுத்தது. அதன்படி 200-க்கு மேற்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் 100-க்கு மேற்பட்ட டிரோன்களை நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து அலை அலையாக இஸ்ரேலுக்குள் செலுத்தியது.
இவற்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. ஆனாலும் சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இஸ்ரேலின் பலம் பொருந்திய அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பையும் உடைத்துக்கொண்டு பல இடங்களை தாக்கியது. முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் குறிப்பாக ஜெருசலேம், டெல் அவிவ் போன்ற நகரங்களில் நடந்த தாக்குதலில் பெரும் சேதம் விளைந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடங்கள் இடிந்து சேதம்
இந்த பகுதிகளில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதமடைந்து உள்ளன. பல இடங்களில் வெடிப்பு சத்தங்களும், கரும்புகை வெளியேறும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.ஈரானின் இந்த பதிலடியில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல இடங்களில் வான் தாக்குதலுக்கான அலாரம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தன.
இந்த தாக்குதலை தொடர்ந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியது. பல இடங்களில் ஈரானின் தாக்குதலை அமெரிக்க தயாரிப்பு வான்பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்ததாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் சிலர் கூறினர்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல் மற்றும் ஈரானின் பதில் தாக்குதல், தீவிர போராக உருமாறும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சம் வெளியிட்டு உள்ளன.
இதற்கிடையே அமெரிக்கா – ஈரான் இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று ஓமனில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்த தாக்குதல் காரணமாக இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் சூழலில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை என ஈரான் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் கூறுகையில், ‘பேச்சுவார்த்தையை அர்த்தமற்றதாக்கும் வேலையை அமெரிக்கா செய்து உள்ளது’ என தெரிவித்தார்.
இஸ்ரேல் எச்சரிக்கை
மறுபுறம் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என இஸ்ரேல் எச்சரித்து உள்ளது. இல்லையென்றால் டெஹ்ரானை எரித்து விடுவோம் என அந்த நாட்டு ராணுவ அமைச்சர் கேட்ஸ் மிரட்டல் விடுத்து உள்ளார்.
––––––––
ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
–––––––––
இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல்- – ஈரான் இடையே மோதல் தீவிரமடைந்த நிலையில், இரு நாடுகளும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானில் 80 பேரும், இஸ்ரேலில் 4 பேரும் உயிரிழந்தனர். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் தெஹ்ரானில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ”இஸ்ரேல் தாக்குதலில் அமெரிக்காவின் பங்கு எதுவும் இல்லை. அமெரிக்காவை ஈரான் தாக்குதல் நடத்தினால் கடும் பதிலடி கொடுப்போம்” என அமெரிக்கா அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஈரானால் நாம் எந்த வகையிலும் தாக்கப்பட்டால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் வலிமையும் இதற்கு முன் கண்டிராத அளவில் பதிலடி கொடுக்கும்.
இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.