செய்திகள்

ஈராக்கில் பெண்களின் திருமண வயது–9: வலுத்து வரும் எதிர்ப்பு

Makkal Kural Official

பாக்தாத், ஆக. 10–

ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான சட்ட மசோதாவை அறிவித்துள்ள நிலையில், உலகம் முழுவதுமுள்ள சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தசட்டத்தை திருத்தும் முயற்சியில் அந்நாடு புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 9 வயது சிறுமிகளுக்கும் 15 வயதுள்ள ஆண் குழந்தைகளுக்கும் அந்நாடு திருமணத்தை அனுமதிக்கிறது.

இஸ்லாமிய மதச்சட்டத்தை தரப்படுத்தவும், தகாத உறவுகளிலிருந்து இளம் பெண்களை பாதுகாக்கவும் திருமண வயது குறித்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூக ஆர்வலர்கள், பெண்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

உலக நாடுகள் கண்டனம்

இது பெண்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு பாதகங்களை விளைவிக்கும் எனவும், இதனால் பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்றும் ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல், குடும்ப வன்முறை அதிகரிக்கும் ஆபத்து உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தை திருமணத்தினால் ஏற்படும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சட்டத்திற்கு ஈராக்கில் மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அமைப்பான யுனிசெப், ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது.

‘இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவது ஒரு நாடு பின்னோக்கி நகர்வதைக் காட்டுகிறது. முன்னோக்கி அல்ல’ என்று மனித உரிமைகள் கண்காணிப்பு (HRW) ஆராய்ச்சியாளர் சாரா சன்பார் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *