சிறுகதை

ஈரம்

சிறுகதை ராஜா செல்லமுத்து

மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

அங்கும் இங்குமென ஆட்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

ஏங்க இங்க முதியோர் பென்சன் எங்க தாராங்க என்ற பெரியவரின் பேச்சுக்கு,

‘‘இந்த வழியா போயி எடது கை பக்கம் திரும்புனா, அங்கன ஒரு அம்மா உட்காந்திருக்கும். அது கிட்ட போய் கேளுங்க .வெவரம் சொல்லும் ‘ என்று இன்னொருவர் சொல்ல …

அந்தப் பெரியவர் அந்த இடத்தை நோக்கி நடந்தார்.

இன்னைக்கு மனுதாரர் குறைதீர்க்கும் நாளா?

இல்லையே.. அது திங்கட்கிழமைங்க,

ம்ம்.. மத்த நாள்ல வைக்க மாட்டாங்களா?

இல்ல.. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தான் மனுதாரர் குறைதீர்க்கும் நாள் என்று சொல்ல வந்தவர் அப்படியே சென்றார்.

ஐயா நானும் ரெண்டு வருசம் நடயா நடந்திட்டு இருக்கேன். ஒரு விமோசனம் இல்லீங்க என்று ஒரு கிழவி புலம்பிக் கொண்டிருந்தாள்.

என்ன பிரச்சினைம்மா.

என்னத்த சொல்லி என்ன செய்யங்க… எம் பையன் ரோடு ஆக்சிடண்ட் ஆகி ரெண்டு வருசம் ஆச்சு.. கவுர்மெண்டல இருந்து காசு தாரேன்னு சொன்னாங்க. நானும் நடையா நடந்து நடந்து கால் மூளையெல்லாம் வத்திப் போச்சுங்க. இன்னைக்கு வரும். நாளைக்கு வரும்னு தான் சொல்றாங்களேயொழிய வந்தபாடில்லீங்க என்று சலித்த அம்மாவைத் தேற்றினார் ஒருவர்.

கண்டிப்பா வரும்ங்க. நீங்க வருத்தப்படாம போங்க என்று வழியனுப்பியவரை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே சென்றாள், அந்த அம்மா.

ஊருக்குள்ள இருந்து இம்புட்டு தூரத்தில கலெக்டர் ஆபீஸ கட்டி வச்சுருக்காங்க. நம்மள மாதிரி கெழடு கெட்டைகளெல்லாம் நறுக்குன்னு வந்திர முடியாது போல .விடியக்கருக்கல்லயே கிளம்புனா தான் இங்க வர முடியும் போல என்று புலம்பிய படியே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்து கொண்டிருந்தார் பொன்னையா.

அவர் கையில் ஒரு மஞ்சள் பை இருந்தது. அதில் கத்தை கத்தையாய் காகிதங்கள் இருந்தன. அதை அடிக்கடி எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யாரு என்ற கேள்விக்குறியோடு

கூப்பிட்ட திசையை நோக்கி கை வைத்துப் பார்த்தபடியே திரும்பினார், அந்தப் பெரியவர். இங்க வாங்க என்று கை காட்டிக் கூப்பிட்ட அந்த இளைஞனை நோக்கி நடந்தார் பொன்னையா.

அவர் அப்படி நடந்து போன போது அவரின் கால்கள் தள்ளாட்டம் போட்டன. நெற்றியில் வேர்த்துப் பூத்த வியர்வைத் துளிகள், அவரின் சுருங்கிய கன்னங்களில் இறங்கி கழுத்தின் வழியே கரைந்து போயின. இடது கையின் மணிக்கட்டில் தொங்க விட்ட பையை ஒரு முறை சரி பார்த்துக் கொண்டவர், மறுபடியும் அதனுள்ளே என்ன இருக்கிறதென்று தொட்டுப் பார்க்கத் தவறவில்லை.

எதுக்கு இந்த பையன் நம்ம கூப்பிடுறான் என்று அவருக்குள்ளே முணங்கியபடியே முன்னேறினார்.

கூப்பிட்டவன் ஒரு திட்டில் உட்கார்ந்திருந்தான்.

இங்க வா பெருசு. எதுவும் பென்சன் சம்மந்தமா போறீங்களா? இல்ல ஏதாவது இழப்பீடு சம்மந்தமாவா?

இல்லப்பா ஏதாவது புகார் மனு குடுக்கணுமா?

ஐயோ இல்லப்பா

வேற எதுக்கு தாத்தா போயிட்டு இருக்க,

ம் …சொல்லித்தான் ஆகணுமா?

‘‘ஆமா தாத்தா ’’ கலெக்டர பாக்கப் போறேன் என்று பெரியவர் சொல்லவும்

“கொள்” எனச் சிரித்தான் கூப்பிட்டவன்.

என்னய்யா இப்பிடிச் சிரிக்கிற?

நீ சொல்றத கேட்டா சிரிப்பு வராம பெறகு என்ன செய்யும்? என்றவன் பெரிய பெரிய ஆபிசர்களே கலெக்டர பாக்க முடியாம திண்டாடுறாங்க. இவரு போனதுமே வான்னு வெத்தல பாக்கு வச்சு அழைக்கிறாங்களாம். போங்க என்று பொன்னையாவை ஒரு மாதிரியாகப் பேசி வழியனுப்பினான் அந்த இளைஞன்.

தட்டுத் தடுமாறிப் போன பெரியவர் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளரைப் பார்த்தார்.

தம்பி கலெக்டர பாக்கணும்…

எதுக்கு? என்று கேவலமாகக் கேட்டான்.

‘‘ஒரு முக்கியமான விசயம்ப்பா ’’ என்கிட்ட சொல்லுங்க அது முக்கியமா இல்லையான்னு நான் சொல்றேன் என்றவன் பொன்னையாவை உள்ளே விடவே இல்லை.

தம்பி நான் கலெக்டர பாக்கனும் என்ற அதே வார்த்தையைச் சொல்லிக் கொண்டே இருந்தார் பொன்னையா.

அப்போது, கலெக்டர் தன் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தார். பொன்னையா உதவியாளரிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தப் பெரியவர்

இங்க என்ன பிரச்சினை என்றபடியே பொன்னையாவிடம் வந்தார்.

சார், இந்த பெரியவர் உங்கள பாக்கணும்னு அடம் பிடிச்சிட்டு இருக்காரு. நான் பாக்க முடியாதுன்னு சொல்றேன்.

அத விட்டுட்டு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கார் என்று உதவியாளர் சொன்னபோது

பொன்னையாவிடம் வந்த கலெக்டர்,

‘‘ஐயா, என்ன வேணும் உங்களுக்கு? ’’என்று கேட்டதும் ஐயா, நான் உங்க கிட்ட நிதியுதவி குடுக்கணும்

என்ன நிதியுதவி? என்ற கலெக்டர் பொன்னையாவிடம் ஆச்சர்யமாகக் கேட்க…

புல்வாமா தீவிரவாத தாக்குதல்ல உயிரிழந்த நம்ம ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு என்ற வரை ஆச்சர்யம் கலந்து பார்த்த கலெக்டர் எவ்வளவு தரப் போறீங்க? என்றதும் அவர் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையில் கையை விட்டு பத்து ரூபாய், இருபது ரூபாய் என்ற அழுக்குப் படிந்த ரூபாய் நோட்டுக்களை அள்ளினார். இந்தாங்கய்யா, நாங்க சேத்த பணம் என்று அவர் கொடுத்த போது, கலெக்டருக்கு என்னவோ போலானது.

ஐயா உங்க பேரு என்ன?

பொன்னையா

உங்க மனைவி பேரு?

குருவம்மாள். குழந்தைகள் என்று கலெக்டர் கேட்டபோது….,

பொன்னையா தேம்பி அழ ஆரம்பித்தார்.

ஐயா, என்னாச்சு? ஒண்ணுல்லய்யா என்றவர்

‘‘நாங்க நாலு புள்ளைகள பெத்து வளத்தோம். எல்லா பயலுகளும் கல்யாணம் காட்சி முடிச்சிட்டு என்னையும் எம் பொண்டாட்டியையும் விட்டுட்டு போய்ட்டானுக. இப்ப நானும் கெழவியும் மட்டும் தான் என்றவர் சாமி .. அது கெடக்கட்டும் யா… காஷ்மீர்ல நடந்த சண்டைய ரேடியோவுல தான் கேட்டேன். எனக்கு உசுரே நடுங்கிப் போச்சுய்யா. ஏய்யா அங்க இப்பிடி சண்ட போட்டுட்டு கெடக்காங்க.

நம்ம சனம் ரொம்ப பேரு செத்துப் போயிட்டாங்க போல. இதுவே கடைசியா இருக்கட்டும் யா.. இனிமே ஒத்த உசுரு சாகக்கூடாது. நானும் எம் பொண்டாட்டியும் தெனமும் வேலைக்கு போயி தான் வயித்த கழுவுறோம். செலவு போக கொஞ்சம் காசு சேத்து வச்சோம். ஒரு ஆயிரம் ரூபா இருக்கு சாமி. இத எப்பிடியாவது செத்துப் போன குடும்பத்திட்ட சேத்துருய்யா என்று அழுக்குப் படிந்த ரூபாய் நோட்டுக்களை கலெக்டரிடம் கொடுத்து விட்டு மஞ்சள் பையை கையில் தொங்க விட்டபடியே படிகளில் கீழே இறங்கி நடந்து போனார் பொன்னையா,

அவரை கலெக்டர் முதற்கொண்டு அங்கு கூடியிருந்த ஆட்கள் ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *