சிறுகதை

ஈரம் – ராஜா செல்லமுத்து

காலை ,மாலை என்ற பாகுபாடில்லாமல் சென்னை நகரம் முழுவதும் எப்போது பார்த்தாலும் வாகனங்களின் நெரிசல் இருந்து கொண்டே இருக்கும்.

சாலையைக் கடப்பதற்கு நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர் நிற்காமல் செல்லும் வாகனங்களைப் பார்த்து ஒரு கட்டத்தில் சலித்துக் கொண்டார்.

ஆத்துல தண்ணி ஓடுறதுகெனக்கா அம்புட்டு பேரும் இவ்வளவு வேகமா போறாங்களே எங்க போறானுங்க? மனுஷன் மக்கள ரோட்டுல நடக்க விடுறாங்களா என்ன ?என்னமோ இவங்களுக்கு தான் ரோடு போட்டு வச்சது மாதிரி சர்சர்ன்னு போயிட்டு இருக்காங்க என்று சலித்துக் கொண்டார் அந்தப் பெரியவர்.

அது இரண்டு வழிச் சாலை என்பதால் இடது புறமும் வலது புறமும் இரண்டு பக்கமும் சாரைசாரையாக வாகனங்கள் போய்க் கொண்டிருந்தன .

நின்று நின்று அலுத்துப்போனவருடன் இன்னும் சில பேர் சேர்ந்து கொண்டார்கள். அதில் துடுக்கான ஒரு இளைஞன் கொஞ்சம் கோபத்துடனே பேசினான்

இப்பிடி நின்னுட்டு இருந்தம்னா, இங்கேயே நின்னுகிட்டு இருக்க வேண்டியதுதான் . நைட்டு 12 மணிக்கு மேல தான் ராேட கிராஸ் பண்ண முடியும் .அப்பதான் ரோடு காலியா இருக்கும். இல்ல ஸ்ட்ரைக் அப்பதான் நாம போக முடியும் வாங்க கைய போடுவோம் என்று சொல்லி அந்த இளைஞன் வேகமாக வரும் வாகனங்களுக்கு நடுவே போய் நின்றான்.

அவன் அப்படி நிற்பதைப் பார்த்த சில வாகன ஓட்டிகள் அவனையும் தாண்டி திட்டிக் கொண்டே சென்றார்கள்.

என்ன வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா .என் வண்டிதான் கிடைச்சதா ஒனக்கு தள்ளி போடா வண்டி வருது .நடுரோட்டில் நிக்கிறான் பாரு என்று வசை வார்த்தைகள் வந்து விழுந்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாத அந்த இளைஞன் அடுத்த ரோட்டுக்குப் போவதற்கு நின்று கொண்டு இருந்த அத்தனை ஆட்களும் ரோட்டை கடந்த பிறகு மற்ற வாகனங்களுக்கு வழி விட்டான் .

என்னமோ டிராபிக் போலீஸ் மாதிரி நின்னு எல்லாத்துக்கும் வழி விட்டுக்கிட்டு இருக்கான் என்று சலித்துக் கொண்ட வாகன ஓட்டிகள் அவனைத் திட்டிய படியே சென்றார்கள் .

அப்போது அவ்வளவாக கூட்டம் இல்லாத ஒரு பேருந்து தார் சாலையில் நகர்ந்து கொண்டிருந்தது.

இந்த பாருங்க 500 ரூபாய்க்கு எல்லாம் என்கிட்ட சில்லற இல்ல இது லேடிஸ் பிரீ டிக்கெட் போற பஸ் கலெக்ஷன் இல்ல .இந்தா பாருங்க என்று தன் தோள் பையைக் திறந்து காட்டினார் அந்த நடத்துனர்.

என்கிட்ட வேற காசு இல்ல சார் இது தான் இருக்கு. இத வாங்கிக்குங்க என்று அந்தப் பயணி சொன்னபோது

இத வாங்கிட்டு நான் எப்படி உனக்கு சில்லறை கொடுக்கிறது வண்டியை விட்டு இறங்கு என்று முறைத்தார் அந்த நடத்துனர்

சார் என்கிட்டயும் சில்லறை இல்ல என்று மறுபடியும் அந்தப் பயணி சொல்ல

அது எதையும் காதில் வாங்காத நடத்துனர் அந்தப் பயணியைக் கீழே இறக்கி விடுவதிலேயே குறியாக இருந்தார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த சில பேர்

எவ்வளவு டிக்கெட் என்று கேட்க அந்தப் பயணியிடம் கேட்டார்கள்

5 ரூபா என்றார் அந்தப் பயணி

ஒரு ஏழைத்தாய் ரூ.5க்கு பதிலாக பத்து ரூபாய் எடுத்துக் கொடுத்தாள்.

வேண்டாம் என்று சொன்னான் அந்தப் பயணி

சில்லறை இருக்குதா என்று அமர்ந்திருந்த ஒரு பயணியிடம் கேட்டவனிடம்,

இந்தா ஒரு நிமிஷம் என்ற ஒரு பெரியவர் தன் கைப்பையை திறந்து அலசிப் பார்த்தார். 500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என்பது தெரிந்தது.

இந்தாங்க அஞ்சு ரூபா இத வச்சுக்கோங்க என்று அந்த பெரியவர் கொடுக்க

பரவாயில்லை என்று சொன்னவன் தன் கையில் இருந்த இரண்டு ரூபாயைக் கொடுத்து ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டான்.

அதற்கு முன்னாலும் எத்தனையோ பேர் அவனுக்கு டிக்கெட் எடுப்பதற்கான பணத்தை நீட்டினார்கள் .

யாரிடம் வாங்காதவன் அந்தப் பயணி இரண்டு ரூபாய் கொடுத்த அந்தப் பெரியவரிடமே ஐந்து ரூபாயை வாங்கி டிக்கெட் எடுத்துக் கொண்டான்.

அந்த நடத்துனருக்கு முகம் கோணிப் போனது .வரும் நிறுத்தத்திற்கெல்லாம் அவன் இறங்கிக் கொண்டான்

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர்

பாத்தீங்களா? இதுதான் மனித நேயம் . அந்தக் கண்டக்டர் நினைச்சிருந்தா அவருக்கு அஞ்சு ரூபா டிக்கெட் கிழிச்சு கைல கொடுத்து இருக்கலாம். ஆனா அந்த கண்டக்டருக்கு நெஞ்சில் கொஞ்சம் கூட ஈரம் இல்ல. யார் எவருன்னே தெரியாத அந்த ஆளுக்கு எத்தனை பேரு பணம் கொடுத்து உதவப் போனிங்க இதுதாங்க இந்த மனசு தாங்க ஈரம். இந்த பண்பு இருக்கிற வரைக்கும் தமிழன் என்னைக்கும் விழவே மாட்டான் என்று அந்தப் பெரியவர் சொன்னபோது

அந்தப் பேருந்து ஒரு மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தது.

பேருந்து பாேகும் வலது திசையில்

‘தமிழ் வாழ்க” “தமிழன் வாழ்க” என்று ஒரு சுவரில் எழுதியிருந்தது .

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *