கல்பாக்கம், செப் 23
கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஈசிஆர் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், நெடுமரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (52). பைனான்ஸ் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை மருமகள் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் கல்பாக்கம் நோக்கி ஈசிஆர் சாலையில் காரில் வந்துக்கொண்டிருந்தார்.
அப்போது, வாயலூர் அருகே சென்னை – -பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதியது. இதில், வெங்கடேசன் வந்து கார் நிலைத்தடுமாறி மரத்தின் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்தகாயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த, சதுரங்கப்பட்டினம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எதிரே மற்றொரு காரில் வந்த இருவர் லேசான காயமடைந்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.