2 கார்கள் பறிமுதல்
சென்னை, ஜன. 31–
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பாலம் அருகே இளம்பெண்கள் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற காரை 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர். மேலும், இளம்பெண்களையும், அவர்களுடன் வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் நடுரோட்டில் காரை மறித்து அவர்களின் காரை நோக்கி ஓடி வந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் அச்சத்தில் அலறி கூச்சலிட்டனர். மேலும் தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்து தப்பிக்க முயன்றபோது, அந்த கும்பல் தங்கள் கார்களில் விரட்டி வந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அண்ணா தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இரவு நேரத்தில் காரில் பயணித்த இளம்பெண்களை மிரட்டும் வகையில் செயல்பட்ட அந்த கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தின. அதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக காரில் பயணித்த பெண், கானத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கானத்தூர் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த இளைஞர்களை கைது செய்ய பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.