சிறுகதை

ஈசல் | ராஜா செல்லமுத்து

மணி – வேலைக்கு போகாமல் அன்றும் வெறுமனே வீட்டிலிருந்தான்.

சும்மா இருக்க இருக்க அவனுக்குள் சோம்பேறித் தனத்தின் சுவடு மேலும் கூடிக் கொண்டே போனது.

‘ச்சே… வேலவெட்டி ஒண்ணுமில்லாம வாழ்ற இந்தப் பொழப்பு நரகத்த விட ரொம்ப மோசமா இருக்கே. எப்பிடிக் காலம் முழுசும் சும்மாவே இருக்கானுகளோ? மணியின் மனதிற்குள் சோகக் கூடு மேலும் மேலும் சுற்றியது.

‘உஷ்’ என விட்டம் பார்த்துக் கிடந்தவனை எழுப்பினான், நண்பன் பழனி.

‘டேய்… மணி .. டேய்’’ என்று உச்சஸ்தாயில் அவன் சத்தம் போட்டது மணியின் மூளையில் கொஞ்சம் கேட்டது.

‘என்ன பழனி’ என்று கொஞ்சம் அரண்டு போய் எழும்பினான்.

‘என்னடா இப்பிடி சும்மாவே படுத்திருக்க… வேல வெட்டிக்குப் போகலையா?

‘ம்க்கும் … வேல வெட்டி… போடா…’ அவன் பேசும் போதே அந்த வார்த்தையில் எளக்காரம் ஒளிந்திருந்தது.

‘என்னடா… ரொம்ப சலிச்சுக்கிற?’

‘பெறகு எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா?’

‘ஏன்?’

‘ஏன்னா எனக்கு வேல இல்ல. கையில காசு பணமில்ல, வாழ்க்கை ரொம்ப போரடிக்குதுடா’

இப்பிடி சும்மா ஒக்காந்திட்டு இருந்தியன்னா … வாழ்க்கையே வெறுத்துப் போகும்’ என்று பழனி சொல்லும் போது மணி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

சரி வா போவோம்’

எங்க?

‘எங்கன்னு சொன்னா தான் நான் வருவேன்’

‘நீ வந்தா தான் சொல்லுவேன்’

‘டேய் …. ஏண்டா இப்பிடி பேசுற?’

‘ஒண்ணோட நல்லதுக்கு தான் சொல்றேன், நீ இப்ப என் கூட வார…’

‘விட மாட்டியே’ என்ற மணி பழனியின் பின்னாலேயே நடந்தான்.’

‘பழனி’

‘ம்’

‘ஒரு டீ குடிச்சிட்டு போவமா?’

‘ஓ… தாராளமா?’ என்று இருவரும் டீ குடித்துவிட்டு மீண்டும் நடந்தனர்.

மழைக்கு தயாரானது வானம்.

‘டேய் பழனி’

‘ம்’

‘இப்பவாவது சொல்றா., என்னைய எங்க கூட்டிட்டு போற. இருட்டிக்கிட்டு வேற வருது’

‘வாடா… எல்லாம் நல்ல விசயம் தான்’

நல்ல விசயம்னு நீ சொல்றது சரி தான். அதுக்காக எங்கே கூட்டிட்டு போறோம்னு சொல்ல வேண்டியது தானடா.

‘வாடா பெரிய கேள்வியெல்லாம் கேப்ப’ என்ற இருவரும் போய்க் கொண்டே இருந்தார்கள்.

அவர்கள் போன இடங்களில் புற்றுகள் நிறைய இருந்தன.

புற்றின் கீழே உட்கார்ந்தான் பழனி.

‘டேய் பழனி என்னடா இங்க ஒக்கார்ற’

‘வேல இல்லன்னு சொன்னயில்ல..’

‘ஆமா’ அதுக்கு ஏன் புத்துகிட்ட ஒக்கார வச்சுருக்கிற?’

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்டா என்ற பழனி புற்றில் தூங்கும் ஈசல்களைப் பிடிக்க ஆரம்பித்தான்.

‘டேய், என்ன இது’

ஈசல புடிச்சு என்ன பண்ணப்போற

ஈசல புடிச்சு என்ன பண்ணப் போறியா? இது தான்டா நம்மோட ஏவாரம், இந்த ஈசல் இன்னைக்கு ஏவாரத்தில பெரிய எடத்தில இருக்குடா. ஒரு கிலோ எறநூறு ரூபா வரைக்கும் விக்குது.

‘டேய் என்ன சொல்ற?’

‘ஆமா மணி’ ஈசல்ங்கிறது சித்த மருத்துவத்தில இந்திர கோப பூச்சின்னு சொல்றாங்க’

இதுல செம்பு சத்து அதிகமா இருக்கிறதாலயும் ஒடம்புல சூடு குடுத்து ஆண்களுக்கு தேவையான சக்தியையும் குடுக்குது. ஈசல எரிச்சு தண்ணியில கலந்து குடிச்சா கக்குவான் இருமல் குணமாகுது. இளம்பிள்ளை வாதம், பக்கவாதம்ன்னு நெறயா நோய்கள் குணமாகுது. பல லட்சம் ரூவா செலவு செஞ்சு குணப்படுத்த முடியாத பெரிய பெரிய நோய்கள் கூட இந்த ஈசல் மருந்தால குணமாகுது என்று பழனி சொன்னபோது மணி வாய் பிளந்து பார்த்தான்.

‘என்ன மணி நான் சொல்றதெல்லாம் ஆச்சர்யமா இருக்கா?’

‘ஆமா பழனி…’

‘ம்… இப்ப அள்ளு ஈசல… அப்பேறம் பணத்தையும் அள்ளுவோம்’

என்று சொன்னபோது மணியும் பழனியும் ஈசலைப் பிடித்து நிரப்பினர்.

இரண்டு பிளாஸ்டிக் சாக்குகளில் நிரப்பப்பட்ட ஈசலை இரண்டு பேரும் தூக்கிக் கொண்டு ஓடினர்.

அன்று வியாபாரம் களை கட்டியது. ஐந்து கிலோவுக்கும் மேலே இருந்தது. கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணம் புரண்டது.

‘பழனி’

‘என்ன மணி’

என்னோட அறிவுக் கண்ணத்த தெறந்திட்டடா’ என்று உச்சி மோந்தான்.

அன்று வியாபாரம் செய்த பணத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

மறுநாள் காலை மணியின் வீட்டிற்குச் சென்றான். பழனி அங்கு மணியில்லாமல் இருந்தது ஆச்சர்யப்பட்டான்.

‘அம்மா மணி எங்க?’

‘அவன்… பிளாஸ்டிக் பைய எடுத்திட்டு காலையிலேயே ஈசல் பிடிக்க போயிட்டானே என்று மணியின் அம்மா சொன்ன போது, பழனிக்கு ஆச்சர்யம் முட்டியது.

‘சரி…சரி… இனி வேல இல்லன்னு சொல்ல மாட்டான்’ என்ற பழனி,

ஈசல் பிடித்துக் கொண்டிருக்கும் மணியைத் தேடி விரைந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *