செய்திகள்

இஸ்ரோ விஞ்ஞானி லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

பெங்களூரு, நவ. 30–

விண்வெளித் துறை தொடர்பான பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான கூட்டு நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானி லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியன் போனபார்ட், 1802-ல், ‘லெஜியன் ஆப் ஹானர்’ என்ற விருதை உருவாக்கினார். பிரான்சுக்கு சிறந்த சேவை செய்தவர்களுக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது. நாட்டின் உயரிய விருதாகக் கருதப்படும் இது வெளிநாட்டினருக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) மனித விண்வெளி ஓடம் திட்டத்தின் (ககன்யான்) முன்னாள் இயக்குனர் வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு, ‘லெஜியன் ஆஃப் ஹானர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தூதர் வழங்கினார்

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தீரி மத்தாவ், லலிதாம்பிகாவுக்கு ‘லெஜியன் ஆப் ஹானர்’ விருதை வழங்கினார். விண்வெளித் துறை தொடர்பான பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையேயான கூட்டு நடவடிக்கையில் முக்கியப் பங்காற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 2018-ம் ஆண்டில், இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்காக அவர் பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். இந்த திட்டம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக முக்கிய காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *