திருவனந்தபுரம், ஜூன் 16–
4 அறிவியல் புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருது பெற்ற, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை முத்து 74 வயதில் திருவனந்தபுரத்தில் காலமானார்.
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து (74 வயது) , திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய இவர், அறிவியல், விண்வெளி தொடர்பாக பல புத்தகங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சிறந்த நூலாசிரியர் விருது
குறிப்பாக விண்வெளி ஆராய்ச்சி மற்றும் அறிவியலை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் நெல்லை சு.முத்து முக்கியப் பங்காற்றினார். அவர் அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம் மற்றும் பிற பொதுவான தலைப்புகள் தொடர்பாக பல நூல்களையும், கட்டுரைகளையும் எளிய தமிழில் எழுதி, சாதாரண மக்களும் அறிவியலை புரிந்துகொள்ள வழிவகுத்தார். அவரது படைப்புத் திறமைக்கு அங்கீகாரமாக, நெல்லை சு.முத்துவின் 4 புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் விருதுகள் கிடைத்துள்ளன.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை சு.முத்து இறுதிச் சடங்குகள் மதுரையில் நடைபெறும் என அவரது மகள் தகவல் தெரிவித்துள்ளார்.