பெங்களூரு, மார்ச்.23-–
இஸ்ரோ தயாரித்துள்ள மறு பயன்பாட்டு ராக்கெட் உந்து வாகனத்தின் 2-வது கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்தது.
பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைமையகத்தில் செயற்கை கோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்த செயற்கைகோள்கள், பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மறு பயன்பாட்டு ராக்கெட் உந்து வாகனங்களை பயன்படுத்தி செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆராய்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக இஸ்ரோ விமான வடிவத்தில் ‘மறு பயன்பாட்டு விண்கல புறப்பாடு வாகனம்’ (ஆர்.எல்.வி.) வாகனத்தை தயாரித்துள்ளது. அதற்கு ‘புஷ்பக்’ என பெயரிடப்பட்டு உள்ளது. முதல் முறையாக இந்த வாகனம் கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 2-ந் தேதி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சித்ரதுர்காவில் உள்ள விண்வெளி சோதனை தளத்தில் உள்ள ஓடுதளத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வாகனம் ஹெலிகாப்டர் மூலம் மேலே கொண்டு செல்லப்பட்டு பறக்க விடப்பட்டது. பின்னர் அந்த வாகனம் தானியங்கி முறையில் செயல்பட்டு துல்லியமாக ஓடுதளத்தில் தரையிறங்கியது.
இந்த நிலையில் அந்த வாகனம் நேற்று 2-வது கட்ட சோதனைக்கு உட்படுத்தப் பட்டது. சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேயில் உள்ள விமானவியல் சோதனை தளத்தில் விமானப்படையின் ‘ஸ்னூக்கர்’ ஹெலிகாப்டர் மூலம் அந்த வாகனம் 4½ கிலோ மீட்டர் உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பறக்க விடப்பட்டது. பின்னர் அந்த வாகனம் தானாக இயங்கி கீழே வந்து ஓடுதளத்தில் துல்லியமாக தரையிறங்கியது. அந்த வாகனத்தை பெங்களூருவில் இருந்தபடி இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டுப்படுத்தினர். அந்த வாகனம் தரையிறங்கியதும், அதில் இருந்த பாராசூட் இயங்கி அதன் வேகத்தை கட்டுப்படுத்தி நிலை நிறுத்தியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த வாகனம் முற்றிலும் இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது.