செய்திகள்

இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே 3வது நாளாக தொடரும் சண்டை: 1200 பேர் பலி

இஸ்ரேலுக்கு விரையும் அமெரிக்க போர்க் கப்பல்கள்

டெல்அவிவ், அக்.9–

இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையிலான சண்டை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. இதில் இருதரப்பிலும் மொத்தம் 1200 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கடந்த சனிக்கிழமை காலை 6.35 மணிக்கு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் 22 இடங்களில் ஊடுருவி அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் முக்கிய இடங்களில் குண்டுகளை வீசினார்கள்.

பல இடங்களில் குடியிருப்புக்குள் நுழைந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனங்களில் ஏற்றி பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

6.35 மணி முதல் 8.30 மணிக்குள் சுமார் 2 மணி நேரத்தில் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் முதலில் இஸ்ரேல் அதிர்ச்சியால் நிலை குலைந்தது. அந்த நாட்டின் வான் மண்டல பாதுகாப்பு கை கொடுக்காததால் இஸ்ரேலின் பல பகுதிகள் தரைமட்டமானது.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகுதான் இஸ்ரேல் தனது பதிலடியை ஆரம்பித்தது. காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைமையகம் உள்பட பல கட்டிடங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டது.

ராக்கெட் குண்டுகள் வீச்சு

நேற்று 2-வது நாளாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே போர் நடந்தது. இதில் இஸ்ரேலில் சுமார் 700 பேரும், காசாவில் 500 பேரும் என சுமார் 1,200பேர் பலியானார்கள். 10 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.

இந்த நிலையில் இன்று 3-வது நாளாக இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டை நீடித்தது. இன்று அதிகாலை இரு தரப்பினரும்ராக்கெட் குண்டுகளை ஏவி தாக்குதலை நடத்தினார்கள். இதற்கிடையே 22 வழிகளில் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை இன்று இஸ்ரேல் தீவிரப்படுத்தியது.

இதற்காக இஸ்ரேல் தெற்கு பகுதிகளுக்கு கூடுதல் ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் இஸ்ரேல் தெற்கு பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இஸ்ரேல் தெற்கு பகுதிக்கும் காசாவுக்கும் இடையே உள்ள பகுதி மிக பயங்கரமான போர்க்களமாக மாறி உள்ளது.

பயங்கரவாதிகளை வேட்டையாடுவதற்கு வசதியாக 20 ஆயிரம் பேரை இஸ்ரேல் இடமாற்றம் செய்துள்ளது. பொதுமக்களை ராணுவ பதுங்கு அரங்குகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்து உள்ளனர்.

57 ராணுவ வீரர்கள் பலி

ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 57 ராணுவ வீரர்கள், 34 போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஐரோப்பிய தலைவர்களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்பு கொண்டு நிலைமைகளை விவரித்தார்.

போப் வேண்டுகோள்

இஸ்ரேலில் தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் பயங்கரவாதமும் போரும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது, அப்பாவி மக்களுக்கு துன்பத்தையும் மரணத்தையும் மட்டுமே தருகின்றன எனவும் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க போர் கப்பல்

இஸ்ரேலின் மீது ஹமாஸ் குழு நடத்தியிருக்கும் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு ஒரு விமானம் தாங்கி கப்பல், கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அனுப்ப இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேலுக்கு கூடுதல் உபகரணங்கள் மற்றும் வெடிபொருட்களை வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கு வெடிமருந்துகள் உட்படக் கூடுதல் ஆயுதங்களை வழங்க உள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் அறிவித்துள்ளார்.

அதேநேரம் எந்த மாதிரியான ஆயுதங்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்களைப் பகிர அமெரிக்கா மறுத்துவிட்டது. இருப்பினும், ஏவுகணை தாக்குதல்களைச் சமாளிக்க உதவும் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு, தாக்குதல் விமான குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை இடை மறுத்துத் தாக்கும் ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்கா ஏற்கனவே இஸ்ரேலுக்கு ஒவ்வொரு ஆண்டும் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளைச் செய்து வருகிறது. அதில் பெரும்பாலான ஆயுதங்கள் ஏற்கனவே இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *