தெஹ்ரான், ஜூன் 14–
நேற்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், டிரோன்களையும் ஈரான் ராணுவம் ஏவியுள்ளது.
நேற்று அதிகாலையில் ஈரானின் பல பகுதிகளை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தியது இஸ்ரேல் ராணுவம். குறிப்பாக அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் அடங்கிய ராணுவ தளங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் 200-க்கு மேற்பட்ட போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கின. இந்த தாக்குதலில் ஈரானின் ஆயுதப்படைகள் தலைவர் முகமது பகேரி, துணை ராணுவப்படையான புரட்சிகர படைத்தளபதி உசேன் சலாமி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும் ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. நாட்டின் எல்லை பகுதியில் அதிகளவிலான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இதற்கான விளைவுகளை அந்த நாடு அனுபவிக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அறிவித்தார். அத்துடன் இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட முக்கிய நகரங்களின் மீதும், ராணுவ தலைமையகம் மீதும் ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியது. கிர்யா பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தையும் தாக்கியது. மேலும் இஸ்ரேல் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் இஸ்லாமியக் குடியரசின் பகுதிகளில் காட்டுமிராண்டித்தனமான, குழந்தைகளைக் கொல்லும் சியோனிச பயங்கரவாத ஆட்சியாளர்களால் நேற்று காலை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் நாட்டின் தற்காப்பு பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஒரு வலிமையான மற்றும் துல்லியமான பதிலடியைத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
150-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரான் ஏவிய நிலையில் அவற்றை நடுவானிலேயே தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் முழுவதும் பல்வேறு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதும், ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.அதேநேரம் தங்கள் நாட்டினர் மீதோ, சொத்துகள் மீதோ ஈரான் தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என.
மக்களுக்கு எதிரானது
அல்ல: இஸ்ரேல்
இஸ்ரேல் – ஈரான் ஆகிய இரு நாடுகளும் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உட்பட 78 பேர் கொல்லப்பட்டனர். 320க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் என ஈரானின் ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: தீய மற்றும் அடக்குமுறை ஆட்சியிலிருந்து உங்கள் விடுதலைக்காக எழுந்து நின்று, மக்கள் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில், உயர் ராணுவ தளபதிகள், மூத்த அணு விஞ்ஞானிகள், அணு ஆயுத உற்பத்தி மையங்கள் உள்ளிட்டவற்றை அழித்துள்ளோம். நேற்றும், இதற்கு முன்பும் பல முறை நான் கூறியது போல், இஸ்ரேலின் போராட்டம் ஈரான் மக்களுக்கு எதிரானது அல்ல. எங்கள் போராட்டம் உங்களை ஒடுக்கி வறுமையில் ஆழ்த்தும் ஆட்சிக்கு எதிரானது.ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும். வரலாற்றின் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றான ஆபரேஷன் ரைசிங் லயனின் நடுவில் நாங்கள் இருக்கிறோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உங்களை ஒடுக்கி வரும் ஆட்சி, இஸ்ரேல் அரசை அழிக்க அச்சுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.