திருமணம் நடக்க சில நாட்களே இருந்த இளம் பெண் பத்திரிகையாளர் பலி
டெல் அவிவ், ஏப். 20–
காசாவில் பணியாற்றி வந்த 25 வயதான இளம் பெண் பத்திரிகையாளர் திருமணம் நடக்க சில நாட்களே இருந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியதிலிருந்து போர் நடவடிக்கைகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு ஆவணப்படுத்திய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா (வயது 25) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் இஸ்ரேலின் இந்த தாக்குதலில் அவரின் கர்ப்பிணி சகோதரி உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்ட ஹமாஸ் உறுப்பினர் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்தான் இது என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
உலகத்துக்கே கேட்கும் மரணம்
“நான் வெறும் செய்தியாகவோ அல்லது நூறில் ஒருவராக இருக்க விரும்பவில்லை. எனது மரணம் உலகத்திற்கே கேட்கும்படியும், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படியும் இருக்க விரும்புகிறேன். காலத்தால் புதைக்க முடியாத ஒரு பிம்பத்தை நான் விரும்புகிறேன்” என அவர் ஒருமுறை சமூக ஊடகத்தில் பதிவிட்ட பதிவை இணையத்தில் பலர் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
2023 அக்டோபர் 7 ந்தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா மீது தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலின் இந்த தாக்குதலால் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்போட்டோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த போர் தொடக்கத்திலிருந்து காசா பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளது. 2023 முதல் 170க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.