ஐநா தகவல்
நியூயார்க், ஜூலை 9–
இஸ்ரேல் நாட்டின் அடாவடி தாக்குதலால், காசாவில் உள்ள 90 சதவீத மக்கள் இடம்பெயர்ந்தள்ளனர் என்று ஐநா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை சுமார் 39,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், காசா நிலைகுலைந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாகவும், நிலமற்றவர்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். உலக நாடுகளின் எச்சரிக்கை, ஐ.நா சபையின் எச்சரிக்கை என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல்.
இந்த நிலையில், ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “காசாவில் 10 பேரில் ஒன்பது பேர் இடம்பெயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இடம்பெயரும் பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்வதால், பாதிக்கப்பட்டவர்கள் மற்றொரு பாதுக்காப்பான இடத்தைத் தேடி செல்லவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் உடமைகள், பாதுகாப்பு, அத்தியாவசிய தேவைகளுக்காக மீண்டும் மீண்டும் தங்கள் வாழ்க்கையை மீட்டமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
90 சத மக்கள் இடப்பெயர்வு
தற்போதுவரை 90 சதவிகித காசா மக்கள் இடம்பெயர்ந்ததாக விவரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் பாதுகாப்பாக இருக்கும் இடமாக கருதும் இடங்களிலிருந்தும், தொடர்ந்து இஸ்ரேலிய ராணுவத்தால் வெளியேற்றப்படுகிறார்கள். காசா பகுதியில் செயல்பட்டுவந்த 36 மருத்துவமனைகளில் 13 மட்டுமே செயல்படுகிறது. மக்கள், குறிப்பாக குழந்தைகள், ஒவ்வொரு நாளும் தண்ணீர் சேகரிக்க 6 முதல் 8 மணிநேரம் வரிசையில் நிற்கிறார்கள். காசாவில் அவசர சுகாதார சேவையை அணுகுவதும் ஒரு சவாலாகவே இருக்கிறது.
வடக்கு காசாவில், 80,000 பேர் பாதுகாப்பான தங்குமிடங்கள் இல்லாமல் தவிக்கின்றனர். இடிபாடுகளுக்கு மத்தியில் போதிய ஆடைகள், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமின்றி பலர் தங்கியிருக்கின்றனர். மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்வதற்கான எரிபொருள், உதவிப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக வெப்பநிலை காரணமாக உணவு பொருள்கள் விரைவில் கெட்டுப்போவதால், அங்கிருக்கும் மக்களுக்கு உடல் உபாதைகளும் தொடர்கிறது.
மனிதாபிமான அமைப்புகளால் நடத்தப்பட்டுவந்த 18 பேக்கரிகளில் 7 மட்டுமே காசாவில் செயல்படுகின்றன. இதில் ஓரளவு செயல்பட்டுவந்த 6 பேக்கரிகள் இப்போது எரிபொருள் பற்றாக்குறையால் செயல்பாட்டை முற்றிலுமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள் மருத்துவ உதவியை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை காஸா பகுதிக்குள் நுழைய அனுமதி மறுத்ததால், ஏப்ரல் மாத இறுதியிலிருந்து எந்த மருத்துவமனை நிர்வாகத்தாலும் காஸாவிற்குள் எந்த மருத்துவப் பொருட்களையும் கொண்டு செல்ல முடியவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.